/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இலவச சீருடை வழங்குவதில் குளறுபடி; அரசு பள்ளி மாணவ, மாணவியர் தவிப்பு
/
இலவச சீருடை வழங்குவதில் குளறுபடி; அரசு பள்ளி மாணவ, மாணவியர் தவிப்பு
இலவச சீருடை வழங்குவதில் குளறுபடி; அரசு பள்ளி மாணவ, மாணவியர் தவிப்பு
இலவச சீருடை வழங்குவதில் குளறுபடி; அரசு பள்ளி மாணவ, மாணவியர் தவிப்பு
ADDED : ஆக 23, 2024 04:44 AM
கரூர்: இலவச சீருடை வழங்குவதில், பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் மாணவ, மாணவியர் தவித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், 751 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. எல்.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை, 38 ஆயிரத்து, 812 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ஆண்டுதோறும், பாடப் புத்தகங்கள், நோட்டுகள், பை, காலணி, சீருடை, கல்வி சார்ந்த உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன. ஆனால், சீருடை வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதால் மாணவ, மாணவியர் தவித்து வருகின்றனர்.
இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு நான்கு ஜோடி இலவச சீருடை வழங்கப்படுகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரைக்கால் டிரவுசர், சர்ட், 6ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு சர்ட், பேன்ட் வழங்கப்படுகிறது.
மாணவியருக்கு, 1 முதல் 4-ம் வகுப்பு வரை ஸ்கர்ட், சர்ட், 5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாவாடை-, சர்ட், 6 முதல் 8 ம் வகுப்பு மாணவிகளுக்கு கோட்டுடன் சுடிதார் வழங்கப்படுகிறது. பள்ளி திறக்கும் நாளில் இரண்டு ஜோடி சீருடை, அரையாண்டு தேர்வில் போது, இரண்டு ஜோடி சீருடை என மொத்தம் நான்கு ஜோடி சீருடை வழங்கப்படும்.
கரூர் மாவட்டத்திற்கு, வாங்கபாளையத்தில் மகளிர் கூட்டுறவு மேம்பாட்டு சங்கம் மூலம் சீருடை வழங்கப்படுகிறது. கடந்த, 20 நாட்களுக்கு முன்பு சீருடை வழங்கும் பணி தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டு, அந்தந்த வட்டார கல்வி அலுவலகம் மூலம் சீருடை வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு, மகளிர் கூட்டுறவு சங்கத்தில் இருந்து பள்ளிகளுக்கு சீருடை நேரடியாக வழங்கப்பட்டது. இதில், பல்வேறு குளறுபடிகளால் காலதாமதம் ஏற்பட்டது. இதனால், மீண்டும் வட்டார கல்வி அலுவலகம் மூலம் சீருடை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் சீருடை வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. மாணவர்களுக்கு சரியான அளவில் சீருடை வழங்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொருக்கும் அளவெடுத்து தைத்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 60 சதவீத மாணவ, மாணவியருக்கு சீருடை வழங்கப்பட்ட நிலையில், 1, 6ம் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு, இன்னும் அளவெடுக்கவில்லை. இனி அளவெடுத்து துணி தைக்க எத்தனை நாட்களாகும் என்று தெரியவில்லை. இவ்வாறு கூறினர்.