விடுமுறை எதிரொலி உணவகங்கள் அடைப்பால் மக்கள் தவிப்பு
விடுமுறை எதிரொலி உணவகங்கள் அடைப்பால் மக்கள் தவிப்பு
UPDATED : நவ 10, 2026 05:18 AM
ADDED : நவ 10, 2026 04:06 AM

கரூர்; தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், கரூரில் ஆட்கள் நடமாட்டமின்றி முற்றிலுமாக வெறிச்சோடியது. உணவகங்கள் மூடப்பட்டதால் விடுதிகள், மேன்ஷன்களில் தங்கி பணியாற்றுவர்கள் உணவு கிடைக்காமல்
அவதிக்குள்ளாகினர்.
சில கடைகளே இயங்கின
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஒரு வாரமாக கரூரின் பிரதான வணிக பகுதியான ஜவஹர் பஜாரில் உள்ள நகைக்கடை, ஜவுளிக்கடை மற்றும் பட்டாசு கடைகளில் விடிய விடிய மக்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த, 7ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, நகரின் பெரும்பாலான தனியார் நிறுவனங்களும் தொழிலாளர்களுக்கு தீபாவளி விடுமுறை அளித்தன. பண்டிகை தினமான நேற்று முன்தினம் மதியத்திற்கு பிறகு, ஒரு சில கடைகள் மட்டுமே குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் இயங்கின.
நடமாட்டம் இல்லை
கரூர் மாநகரின் முதுகெலும்பாக விளங்கும் ஏற்றுமதி ஜவுளி நிறுவனங்கள், கொசுவலை உற்பத்தி நிலையங்கள், பஸ் பாடி கட்டும் தொழிற்கூடங்கள் மற்றும் கனரக வாகன பராமரிப்பு பணிமனைகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு
விடுமுறை வழங்கி முழுமையாக மூடப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்ட நிலையில், தொழிற்
சாலைகள் நிறைந்த பகுதிகள் ஆள் நடமாட்டமின்றி காணப்படுகின்றன.
குறைந்தளவே கடைகள்
பண்டிகை விடுமுறையையொட்டி பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியதாலும், தொழில் நிறுவனங்கள் இயங்காததாலும், முக்கிய வீதிகள் அனைத்தும் வெறிச்சோடின.
நகரின் பெரும்பாலான சைவ மற்றும் அசைவ உணவகங்கள், மெஸ்கள் மற்றும் சிற்றுண்டி கடைகளில் ஒரு சிலது மட்டுமே திறக்கப்பட்டிருந்தன. உணவக தொழிலாளர்களும் பண்டிகை விடுமுறையில் சென்றிருப்பதால் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை.
இதனால் கரூரில் உள்ள சில தனியார் நிறுவனங்கள், வங்கிகளில் பணியாற்றி, மேன்ஷன்களிலும் விடுதிகளிலும் தங்கியுள்ள வெளிமாவட்ட வாலிபர்கள் மற்றும் ஊழியர்கள் உணவு, குடிநீர் மற்றும் சிற்றுண்டிக்கு தடுமாறினர்.
