/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் மினி டைடல் பூங்கா அமைக்க இடம் தேர்வு
/
கரூரில் மினி டைடல் பூங்கா அமைக்க இடம் தேர்வு
ADDED : டிச 25, 2024 02:13 AM
கரூரில் மினி டைடல் பூங்கா அமைக்க இடம் தேர்வு
கரூர், டிச. 25-
கரூர் மாநகராட்சி, 1வது வார்டு பகுதியில் உள்ள கோதை நகரில், மினி டைடல் பூங்காவிற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தி, கொசுவலை தயாரிப்பு, பஸ் பாடி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடக்கின்றன. கரூர் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பவளர்ச்சி ஏற்படுத்தவும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கும் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும். 500 தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என, தி.மு.க., அரசு அறிவித்தது.அதன்படி, மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது. அதில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) மற்றும் தமிழ்நாடு எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் (எல்காட்) ஆகியவை இணைந்து பூங்கா அமைக்க உள்ளன. தற்போது, கரூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில், 4.74 ஏக்கர் பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. கரூர் மாநகராட்சி 1வது வார்டுக்குட்பட்ட கோதை நகர் உள்பட மூன்று இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கோதை நகரில் உள்ள இடம் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கிருந்து, கரூர் ரயில்வே ஸ்டேஷன், 5 கி.மீ தொலைவிலும், கரூர் பஸ் ஸ்டாண்ட், 4 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட வசதியாக, 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டிடம் கட்டப்படும்.
இது குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பு கரூர் மாவட்ட தலைவர் பாலசுப்ரமணி கூறியதாவது: இந்த மினி டைடல் பூங்காவால், மாவட்ட வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு செல்லும். கரூர் நகரத்தில் ஏற்கனவே செயல்படும், 20 ஐ.டி., நிறுவனங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பூங்கா அமைத்தால், வெளியூரில் பணி செய்பவர்கள், சொந்த மாவட்டத்தில் பணி செய்ய வாய்ப்பு கிடைக்கும். கரூரில் ஐ.டி, சார்ந்த பல உயர் படிப்புகளை மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு உள்ளூர் வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

