ADDED : ஜூலை 05, 2026 05:12 AM
குளித்தலை:குளித்தலை அடுத்த நெய்தலுார் பஞ்., கட்டாணிமேடு அரசு தொடக்கப்பள்ளியில் மகிழ் முற்றம் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் சித்ரா தலைமை வகித்து பேசியதாவது:அரசு
பள்ளிகளில் மாணவர்களின் தலைமைப்பண்பு, குழு மனப்பான்மை மற்றும்
ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை
அறிமுகப்படுத்திய ஒரு மாணவர் குழு அமைப்பு தான், 'மகிழ் முற்றம்'
ஆகும். இது, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என, ஐந்து வகை
நிலங்களின் அடிப்படையில், ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு
இயங்குகிறது. ஒவ்வொரு குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்
தலைவர்கள் மற்றும் பிற மாணவ அமைச்சர்கள் இருப்பார்கள். இந்த குழுவின்
மூலம் பள்ளிகளில் கல்வி, விளையாட்டு, கலை, சுற்றுச்சூழல்
விழிப்புணர்வு போன்ற பல்வேறு செயல்பாடுகளை ஆரோக்கியமான
போட்டிகளுடன் நடத்த உதவுகிறது.
பள்ளியில் உள்ள அனைத்து மாணவ,
மாணவியர் மற்றும் ஆசிரியர்களை, ஐந்து குழுவாக பிரிக்கப்படுகின்ற
குழுக்கள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். இதன் மூலம் சமூக மனப்பான்மை
மற்றும் வேற்றுமைகள் இல்லாத பரஸ்பர ஆதரவுகள் ஆகியவைகளை வளர்த்து
எடுப்பது தான் முதன்மை நோக்கமாகும். இதேபோல் மாதிரி சட்டசபை, மாதிரி
பாராளுமன்றம் போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு மாணவர்கள் மத்தியில்
ஆளுமை திறன்கள் வளர்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
