செடி, கொடிகளுக்குள் மாயமான மைல் கற்கள் வழி தெரியாமல் தவிக்கும் வாகன ஓட்டிகள்
செடி, கொடிகளுக்குள் மாயமான மைல் கற்கள் வழி தெரியாமல் தவிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 10, 2026 04:09 AM
கரூர்: கிராமப்புற சாலைகளில் உள்ள தொலைவை குறிக்கும் மைல் கற்களை அடர்ந்த செடி, கொடிகள் முற்றிலுமாக மறைத்துள்ளதால், வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், ஊர்களின் துாரம் தெரியாமல் சிரமப்படுகின்றனர்.
கரூர் நகரில் இருந்தும், பிரதான நெடுஞ்சாலைகளில் இருந்தும் அனைத்து கிராமங்களுக்கும் தார்ச்சாலை மற்றும் இணைப்பு சாலை வசதிகளை நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித் துறை மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இச்சாலைகளில் பயணிப்போரின் வசதிக்காக, குறிப்பிட்ட கிராமம் இன்னும் எத்தனை கி.மீ., தொலைவில் உள்ளது, அடுத்து வரும் கிராமம் எது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ளும் வகையில், சாலையோரங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மைல் கற்கள் (வழிகாட்டி கற்கள்) நடப்பட்டுள்ளன.
புதிதாக அப்பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, மைல் கற்கள் முக்கிய வழிகாட்டியாக இருந்து வருகின்றன. இந்நிலையில், மாவட்டத்தின் பெரும்பாலான கிராமப்புற சாலைகளில், பராமரிப்பு பணி சரிவர மேற்கொள்ளப்படாததால், சாலையின் இருபுறங்களிலும் அடர்ந்த முட்செடிகள், கொடிகள் படர்ந்து சாலை வளைவு மற்றும் திருப்பங்களில் நடப்பட்டுள்ள மைல் கற்களை ஆக்கிரமித்து மூடியுள்ளன. இதனால் மைல் கல் இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு மறைந்து போயுள்ளது.
இதன் காரணமாக, அவ்வழியே புதிதாக செல்லும் வாகன ஓட்டிகள், செல்ல வேண்டிய ஊர் கடந்து விட்டதா அல்லது இன்னும் எவ்வளவு துாரம் செல்ல வேண்டும் என்பதை அறிய முடியாமல் தடுமாறுகின்றனர். மைல் கற்களை மறைத்துள்ள செடி, கொடிகளை வெட்டி அகற்றி, மைல் கற்களுக்கு புதிதாக, வெள்ளை மற்றும் மஞ்சள் வர்ணம் பூசி ஊர்களின் பெயர்களை தெளிவாக எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும்.
