/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஒப்புதல் பெறாமல் நிர்வாகி பட்டியல் வெளியீடு நிறுத்தி வைப்பதாக துணை தலைவர் அறிவிப்பு
/
ஒப்புதல் பெறாமல் நிர்வாகி பட்டியல் வெளியீடு நிறுத்தி வைப்பதாக துணை தலைவர் அறிவிப்பு
ஒப்புதல் பெறாமல் நிர்வாகி பட்டியல் வெளியீடு நிறுத்தி வைப்பதாக துணை தலைவர் அறிவிப்பு
ஒப்புதல் பெறாமல் நிர்வாகி பட்டியல் வெளியீடு நிறுத்தி வைப்பதாக துணை தலைவர் அறிவிப்பு
ADDED : ஜன 03, 2025 01:35 AM
கரூர், ஜன. 3-
மாநில தலைமை ஒப்புதல் பெறாமல், கரூர் மாவட்ட நிர்வாகி பட்டியல் வெளியிட்டதை, பா.ஜ., மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், பா.ஜ., அமைப்பு தேர்தல் நடந்து வருகிறது. முதல் கட்டமாக கிளை தலைவர்கள், மண்டல் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், கரூர் மாவட்டத்தில், 22 மண்டலங்களில் உள்ள, 1,558 கிளை தலைவர்கள் தேர்தல் நடந்து வருகிறது.
இதில் நடந்து முடிந்த, 15 மண்டல தலைவர்கள் பட்டியலை, பா.ஜ., கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் வெளியிட்டார். நேற்று கரூர் பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட தலைவர் செந்தில்நாதன், தேர்வு செய்யப்பட்ட மண்டல தலைவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். இந்த போட்டோக்கள், சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது. அதனால், கட்சிக்குள் பெரிய பூகம்பமே கிளம்பியது.
தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை, மாநில தலைமைக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் தான் வெளியிட வேண்டும். கடந்த ஒரு வாரமாக, பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகி பட்டியலை, அக்கட்சி மாநில துணைத் தலைவரும், மாநில தேர்தல் அதிகாரியுமான சக்ரவர்த்தி வெளியிட்டு வருகிறார். அதற்கு மாறாக, கரூர் மாவட்டத்தில் மட்டும் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் வெளியிட்டு விட்டார் என்பதால், அக்கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில், தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், தலைமையின் ஒப்புதல் இன்றி, அறிவிப்பை வெளியிடும் உரிமை மாவட்ட தலைவருக்கு இல்லை. ஆகவே தலைமையின் ஒப்புதல் வரும் வரை, இந்த அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுகிறது என, மாநில துணைத் தலைவரும், தேர்தல் மேல்முறையீட்டு குழு இணை அமைப்பாளருமான ராமலிங்கம், கட்சி நிர்வாகிகள் வாட்ஸ் ஆப் குழுவில் பதிவிட்டு உள்ளார். அதனை, கட்சி நிர்வாகிகள் பொது வெளியில் பகிர்ந்து வருகின்றனர்.
இது குறித்து, பா.ஜ., மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் கூறுகையில்,'' இப்பிரச்னை உள்கட்சி விவகாரமாகும். மாநில தலைமை மூலமாக, நிர்வாகி பட்டியல் அறிவிக்க வேண்டும் என்ற நடைமுறை தெரியாமல் வெளியிட்டு விட்டார். அதனால், நிர்வாகிகள் பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சரிபார்த்த பின் பட்டியல் வெளியிடப்படும்,'' என்றார்.