அளவுக்கு அதிகமாக மண் அள்ளிய லாரிகளை சிறை பிடித்து போராட்டம்
அளவுக்கு அதிகமாக மண் அள்ளிய லாரிகளை சிறை பிடித்து போராட்டம்
ADDED : அக் 23, 2026 07:06 AM

கரூர்:கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம்
சட்டசபை தொகுதிக்குட்பட்ட வீரராக்கியம் பகுதியில் உள்ள, அரசு
குளத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட, பல மடங்கு அதிகமாக கிராவல் மண்
அள்ளப்படுவதை கண்டித்து, அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்
லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
ஏற்பட்டது.
கரூர் -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்,
வீரராக்கியத்தில் புதிய உயர்மட்ட பாலம் கட்டுமான பணி நடக்கிறது.
கட்டுமானத்திற்காக, அங்குள்ள நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள
வீரராக்கியம் குளத்தில், (ஏரி) மண் எடுக்கும் பணியில் ஒப்பந்ததாரர்
ஈடுபட்டுள்ளார். ஆனால் அளவுக்கு அதிகமாக, மண் அள்ளப்பட்டு வருவதாக
புகார் எழுந்தது.
இந்நிலையில், நேற்று அங்கு மண் ஏற்றிச் செல்ல வந்த
லாரிகளை விவசாயிகள், பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில்
ஈடுபட்டனர். இதையறிந்த கிருஷ்ணராயபுரம் த.வெ.க.,- எம்.எல்.ஏ.,
சத்யா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை
நடத்தினார். அப்போது, 'விவசாய தேவைகளுக்கோ, ஊர் கோவில் அல்லது
இளைஞர்களின் விளையாட்டு மைதானத்தை சீரமைக்கவோ, சிறிதளவு மண்
எடுத்தால் கூட உடனடியாக வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் வழக்கு
பதிவு செய்கின்றனர். ஆனால், பாலம் பணி என்ற பெயரில் மண் கொள்ளை நடப்பதை
கண்டும் காணாமல் வேடிக்கை பார்க்கின்றனர்' என, விவசாயிகள் புகார்
தெரிவித்தனர்.
அதற்கு எம்.எல்.ஏ., சத்யா, ''உரிய ஆய்வு மேற்கொண்டு,
அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்படுவதை தடுத்து, தகுந்த நடவடிக்கை
எடுக்கப்படும்,'' என உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள்,
விவசாயிகள் கலைந்து சென்றனர்.
