/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.8.08 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகளுக்கு பூஜை
/
ரூ.8.08 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகளுக்கு பூஜை
ADDED : ஆக 17, 2025 01:49 AM
கரூர், கரூர் மாநகராட்சியில், 8.08 கோடி ரூபாய் மதிப்பில், 103 புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை, கரூர் எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி தொடங்கியும், முடிவுற்ற பணிகளை திறந்தும் வைத்தார்.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை திறந்தும் வைத்தார். அதில், கரூர் மாநகராட்சி மண்டல, 3, 4வது மண்டலங்களுக்குட்பட்ட வார்டுகளில் புதிதாக சிமென்ட் சாலை, மழைநீர் வடிகால், தார்ச்சாலை மேம்படுத்தும் பணி, பேவர் பிளாக் அமைக்கும் பணி, மூலக்காட்டானுார் நீருந்து நிலையத்தில் வட்டக்கிணறு துார்வாருதல், நீர்மூழ்கி பம்பு செட் உபகரணங்கள் வினியோகம் மற்றும் சோதனை செய்து இயக்குதல் பணியை பூமி பூஜை செய்து செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
பின், கட்டளை சணப்பிரட்டி நீருந்து நிலையத்தில், புதிய நீர்மூழ்கி மோட்டார், மின் உபகரணங்கள் மற்றும் வட்ட கிணறு அமைக்கும் பணிகளையும், 4வது மண்டலத்துக்கு உட்பட்ட தலைமை நீரேற்று நிலையம், பொன் நகர் நீருந்து நிலையத்தில் டிஜிட்டல் அளவு மானி, தானியங்கி மின்தேக்கி, டிரான்ஸ்பார்மர், ஜெனரேட்டர் பாதுகாப்பு உபகரணங்கள் வினியோகம் என மொத்தம், 8.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 103 புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தொடங்கியும், முடிவுற்ற பணிகளை திறந்தும் வைத்தார்.
நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், டி.ஆர்.ஓ., கண்ணன், கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல், மாநகராட்சி கமிஷனர் சுதா, மாநகராட்சி செயற்பொறியாளர் சுந்தர்ராஜ், மண்டல குழு தலைவர்கள் ராஜா, கனகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.