/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் சம்பவம் குறித்து அரசிடம் அறிக்கை கேட்கும் எஸ்.சி., -- எஸ்.டி., ஆணையம்
/
கரூர் சம்பவம் குறித்து அரசிடம் அறிக்கை கேட்கும் எஸ்.சி., -- எஸ்.டி., ஆணையம்
கரூர் சம்பவம் குறித்து அரசிடம் அறிக்கை கேட்கும் எஸ்.சி., -- எஸ்.டி., ஆணையம்
கரூர் சம்பவம் குறித்து அரசிடம் அறிக்கை கேட்கும் எஸ்.சி., -- எஸ்.டி., ஆணையம்
ADDED : அக் 05, 2025 01:26 AM
கரூர்:''நெரிசல் விபத்து குறித்த முழுமையான அறிக்கை தமிழக அரசிடம் கோரப்பட்டுள்ளது,''என, தேசிய எஸ்.சி., - எஸ்.டி., ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில், த.வெ.க., தலைவர் விஜய், செப்., 27ல் மேற்கொண்ட பிரசாரத்தின் போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இது குறித்து விசாரணை நடத்த, ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய எஸ்.சி.,- எஸ்.டி., ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா தலைமையிலான குழுவினர், நேற்று கரூர் வந்தனர். கூட்ட நெரிசல் நிகழ்ந்த இடமான வேலுச்சாமிபுரத்திற்கு, நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்களிடம், அன்றைய தினம் நடந்த நிகழ்வுகள் குறித்து, கலெக்டர் தங்கவேல் விளக்கம் அளித்தார்.
பின்னர், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த, பட்டியலின பிரிவை சேர்ந்த, 15 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கிஷோர் மக்வானா குழுவினர், சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.
கிஷோர் மக்வானா கூறியதாவது:
கரூரில் நடந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த, 41 பேரில் பட்டியலின பிரிவை சேர்ந்த குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறப்பட்டது. மக்கள் விழிப்புடன் இருந்திருந்தால், உயிரிழப்பை தவிர்த்திருக்க முடியும். இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள், மீண்டும் நடக்காமல் இருக்க உரிய கவனம் செலுத்த வேண்டும். உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசு வேலை வழங்க வேண்டும்.
இறந்தவர்கள் அனைவரும் மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். இந்த நெரிசல் விபத்து குறித்த முழுமையான அறிக்கை, தமிழக அரசிடம் கோரப்பட்டுள்ளது. அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.