/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் வெண்ணைமலையில் கோவிலுக்கு சொந்தமான 3 கடைகளுக்கு 'சீல்' வைப்பு
/
கரூர் வெண்ணைமலையில் கோவிலுக்கு சொந்தமான 3 கடைகளுக்கு 'சீல்' வைப்பு
கரூர் வெண்ணைமலையில் கோவிலுக்கு சொந்தமான 3 கடைகளுக்கு 'சீல்' வைப்பு
கரூர் வெண்ணைமலையில் கோவிலுக்கு சொந்தமான 3 கடைகளுக்கு 'சீல்' வைப்பு
ADDED : செப் 20, 2024 02:29 AM
கரூர்: கரூர் வெண்ணைமலையில், கோவிலுக்கு சொந்தமான மூன்று கடைகளுக்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.
கரூர், வெண்ணைமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலை சுற்றி, 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், கடைகள் உள்ளன. அவை அனைத்தும் கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது. கோவில் நிலங்களை மீட்பது குறித்து, திருத்தொண்டர் சபை தலைவர் ராதாகிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக, 2019ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக்கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ராதாகிருஷ்ணன் அண்மையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல், 'பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், ஹிந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம்' என, அறிவிப்பு பலகை அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்காலிககமாக பணி நிறுத்தப்பட்டது.
இதற்கிடையில், வெண்ணெய்மலையில் உள்ள கடைகளுக்கு, 'சீல்' வைக்கும் நடவடிக்கையை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள நேற்று காலை, 10:00 மணிக்கு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகளவில் பொதுமக்கள் திரண்டதால், அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடந்தது. கரூர் ஆர்.டி.ஓ., முகமதுபைசல் தலைமையில், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணிகாந்த், ஏ.டி.எஸ்.பி., பிரேம்ஆனந்த், டி.எஸ்.பி., செல்வராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வெண்ணைமலை பகுதியில் உள்ள, மூன்று கடைகளுக்கு மாலை, 4.00 மணிக்கு,'சீல்' வைத்தனர். இதையடுத்து அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள், எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.