ADDED : மே 08, 2024 05:27 AM
கரூர் : கரூரில் சுற்றித்திரிந்த புள்ளி மானை, வனத்துறையினர் நேற்று மீட்டனர்.கரூர் அருகே, அண்ணா நகர் பகுதியில் நேற்று அதிகாலை, பெண் புள்ளி மான் ஒன்று சுற்றி திரிவதாகவும், அதை நாய்கள் துரத்துவதாகவும், அப்பகுதி மக்கள், போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
பிறகு போலீசார், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அண்ணா நகர் பகுதிக்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், புள்ளி மானை தேடி அலைந்தனர். இறுதியாக, தனியாருக்கு சொந்தமான ஜவுளி குடோனில் தஞ்சம் புகுந்திருந்த, புள்ளி மானை வனத்துறையினர் மீட்டனர்.அப்போது, புள்ளி மானுக்கு உடலில் சில இடங்களில் காயம் இருந்தது. இதனால், புள்ளி மான் சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. திருப்பூர் மாவட்டம், காட்டுப் பகுதியில் இருந்து, தண்ணீரை தேடி அமராவதி ஆற்றின் பகுதி வழியாக, புள்ளி மான் கரூர் நகருக்குள் நுழைந்திருக்கலாம் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.

