/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தாலுகா அலுவலகத்துக்கு பூட்டு; சாலை மறியல் செய்த 19 பேர் கைது
/
தாலுகா அலுவலகத்துக்கு பூட்டு; சாலை மறியல் செய்த 19 பேர் கைது
தாலுகா அலுவலகத்துக்கு பூட்டு; சாலை மறியல் செய்த 19 பேர் கைது
தாலுகா அலுவலகத்துக்கு பூட்டு; சாலை மறியல் செய்த 19 பேர் கைது
ADDED : நவ 24, 2024 01:18 AM
தாலுகா அலுவலகத்துக்கு பூட்டு; சாலை மறியல் செய்த 19 பேர் கைது
குளித்தலை, நவ. 24-
கரூர் மாவட்டத்தில், குளித்தலை தாலுகா அலுவலகம் பூட்டியது, சாலை மறியல் நடத்தியது தொடர்பாக, விவசாயிகள் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
மருதுார், உமையாள்புரம் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைத்தல் தொடர்பாகவும், சிவகங்கை காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில், காவிரி ஆற்றில் சட்டத்திற்கு புறம்பாக மணல் எடுத்து கட்டடம் கட்டியது சம்பந்தமாக மனு அளித்தும், அதிகாரிகள் பதில் தராததால் நேற்று மதியம், 1:00 மணியளவில் நேரில் சந்தித்து விளக்கம் கேட்க, குளித்தலை தாலுகா அலுவலகத்துக்கு, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, மக்கள் நல ஆலோசனை மைய தலைவர் ராஜ்குமார் மற்றும் விவசாயிகள் வந்தனர்.
டி.எஸ்.பி., செந்தில்குமார், மண்டல துணை தாசில்தார் ஜெயவேல்காந்தன், தலைமையிடத்து துணை தாசில்தார் சித்ரா ஆகியோர், அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகளிடம், உங்களது கோரிக்கைக்கு வரும் திங்கட்கிழமையன்று முழுமையான தகவல் தெரிவிக்கப்படும் என்றனர். அப்போது அங்கு தாசில்தார் இந்துமதி வந்தவுடன், அதிகாரிகள் அய்யாக்கண்ணுவிடம் பேசிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், திருச்சி மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் தமிழ்செல்வன், 40, என்பவர் தாலுகா அலுவலகத்துக்கு பூட்டு போட்டார்.
விவசாயிகளிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, அலுவலகத்துக்கு யார் பூட்டு போட்டது என அதிகாரிகள் கேட்டனர். சிறிது நேரம் கழித்து, நான்தான் பூட்டு போட்டேன் என தமிழ்செல்வன் கூறினார். பின், அதிகாரிகள் கேட்டு கொண்டதன்படி, அலுவலகத்தை திறந்தார். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் உதயகுமார், எப்படி அலுவலகத்தை பூட்டு போடலாம் என கேட்டார். அப்போது தமிழ்செல்வன் முரண்பட்ட கருத்தை தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
அங்கிருந்த விவசாயிகள், அவரை விட வேண்டும் என கேட்டனர். போலீசார் விட மறுத்ததால், ஆவேசமடைந்த விவசாயிகள், தாலுகா அலுவலகம் முன், திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிடாததால், விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு, மக்கள் நல ஆலோசனை மைய தலைவர் ராஜ்குமார் உட்பட, 19 பேரை போலீசார் கைது செய்து, அண்ணா திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக வந்த, குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்கள், தங்களுக்கு ஏதும் தெரியாது; எங்களை கைது செய்ய வேண்டாம். மனு கொடுக்க போகிறோம் என்று அழைத்ததின் பேரில் வந்தோம். எங்களை விட்டு விடுங்கள் என பெண்களும் கூறினர். பின், போலீசார் பெண்களிடம் முகவரி கேட்டு கையொப்பம் பெற்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.