/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நகராட்சி கடைகளை இடிக்க எதிர்ப்பு; வியாபாரிகள் மறியல்
/
நகராட்சி கடைகளை இடிக்க எதிர்ப்பு; வியாபாரிகள் மறியல்
நகராட்சி கடைகளை இடிக்க எதிர்ப்பு; வியாபாரிகள் மறியல்
நகராட்சி கடைகளை இடிக்க எதிர்ப்பு; வியாபாரிகள் மறியல்
ADDED : செப் 21, 2025 01:34 AM
புன்செய்புளியம்பட்டி :புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமாக, 80க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. புதிதாக, 26 வணிக வளாக கடைகள் கட்ட, 3.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 23 கடைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நகராட்சி எம்.ஜி.ஆர்., வணிக வளாக கடை குத்தகைதாரர் ஆறு பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் மீதி மூன்று கடைகள் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் எம்.ஜி.ஆர்., வணிக வளாக கடைகளின் வாடகை தொகை நிலுவையில் உள்ளதாகவும், கடைகள் கட்டப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால், பயன்பாட்டிற்கு தகுதி இல்லாத நிலையில் உள்ளதாக கூறி கடைகளை இடித்து அகற்ற, பொக்லைன் இயந்திரத்துடன் நகராட்சி அலுவலர்கள் நேற்று வந்தனர். கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொக்லைன் இயந்திரத்தை சிறை பிடித்து சத்தி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் பஸ் ஸ்டாண்ட் அருகே சாலையில் பூக்களை கொட்டி மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனாலும் கடைகளை இடிக்கும் பணி நடந்ததால், பெண் ஒருவர் சாலை நடுவில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த மக்கள் தண்ணீரை ஊற்றி அவரை தடுத்தனர். அதை தொடர்ந்து நகராட்சி கமிஷனரை வியாபாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து புன்செய் புளியம்பட்டி போலீசார், நகராட்சி கமிஷனரை பாதுகாப்பாக அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து நகராட்சி அலுவலகத்தில் பவானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி, சத்தியமங்கலம்டி.எஸ்.பி., முத்தரசன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் கருணாம்பாள் கூறியதாவது: எம்.ஜி.ஆர்., வணிக வளாகத்தில் ஆறு கடைகள், ஆறு மாதம் முதல் இரண்டாண்டுகள் வரை வாடகை நிலுவை வைத்துள்ளனர். சில கடைகளின் உரிமம் புதுப்பிக்கவில்லை. இந்த ஆறு கடைகளும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக பொதுப்பணித்துறை சான்று வழங்கியுள்ளது.
இதனால் பாதுகாப்பு கருதி கடைகளை அப்புறப்படுத்த வேண்டிய நிலையில் நகராட்சி உள்ளது. புதிதாக கட்டப்படும் மூன்று கடைகளும் அங்குதான் அமைய உள்ளது. வாடகை நிலுவையை கட்டும் வியாபாரிகளுக்கு, பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள, நகராட்சிக்கு சொந்தமான கடைகளை ஒதுக்க நகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது. இவ்வாறு கூறினார்.
தலைவரை தாக்க முயன்றதாக புகார்
வணிக வளாக கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி அலுவலகத்துக்கு சென்ற, கடை குத்தகைதாரர்களான அ.தி.மு.க.,வை சேர்ந்த ராமசாமி, அவரது மகள் காயத்ரி, மகன் ஹரிஷ் மற்றும் பத்மா ஆகியோர், நகராட்சி அலுவலகத்தில் இருந்த தலைவர் ஜனார்த்தனன், துணைத்தலைவர் சிதம்பரத்தை தாக்க முற்பட்டதாக கூறி, புன்செய்புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், தலைவர் தரப்பில் புகார் தரப்பட்டது. இந்நிலையில் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது தாக்குதல் நடத்த முயன்றவர்களை கைது செய்யக்கோரி, நகராட்சி துாய்மை பணியாளர் மற்றும் தி.மு.க.,வினர் என, 200க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறவே, மறியலை கைவிட்டனர்.