/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கப்படுமா?
/
அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கப்படுமா?
ADDED : மார் 04, 2024 07:33 AM
கரூர் : அமராவதி ஆறு, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உற்பத்தியாகி, கரூரில் பாய்ந்தோடி திருமுக்கூடலுார் பகுதியிலுள்ள காவிரி ஆற்றில் கலக்கிறது.
தற்போது, வறட்சி நிலவி வருவதால், கரூர் அமராவதி ஆறு மணற்பாங்காக தான் காட்சி தருகிறது. மேலும், குடிநீருக்காக ஆற்றில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றிலும் நீர்மட்டம் குறைந்திருப்பதால் தற்போது ஆங்காங்கே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதை தவிர ஆற்றில் மணல் திருட்டு பிரச்னையும் ஆங்காங்கே நடப்பதால் இயற்கை வளம் சுரண்டப்படுவதற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
இந்நிலையில், கரூரில் தற்போது தொழில் நிறுவனங்கள், அடுக்குமாடி வீடுகள் ஆகியவை பெருகி விட்டதால் கழிவுநீரை வெளியேற்றுவதில் முறையான வடிகால் வசதி இல்லை. இதனால் கரூர், திருமாநிலையூர், பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நேராக ஆற்றில் கலக்கிறது. இதனால், கரூர் அமராவதி பாலம், பசுபதிபாளையம் ஆற்று பாலத்தில் வாகனங்களில் செல்வோர் துர்நாற்றத்தை பொறுத்துகொள்ள முடியாமல் மூக்கை பொத்திக்கொண்டு கடந்து செல்கின்றனர்.
எனவே, கரூரின் நீராதாரமான அமராவதி ஆற்றை, வருங்கால சந்ததியினரும் பயன்படுத்தும் விதமாக, கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

