/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பள்ளி கட்டட கான்கிரீட் கூரை பெயர்ந்து 3 மாணவர்கள் காயம்; உதவி பொறியாளர் 'சஸ்பெண்ட்'
/
பள்ளி கட்டட கான்கிரீட் கூரை பெயர்ந்து 3 மாணவர்கள் காயம்; உதவி பொறியாளர் 'சஸ்பெண்ட்'
பள்ளி கட்டட கான்கிரீட் கூரை பெயர்ந்து 3 மாணவர்கள் காயம்; உதவி பொறியாளர் 'சஸ்பெண்ட்'
பள்ளி கட்டட கான்கிரீட் கூரை பெயர்ந்து 3 மாணவர்கள் காயம்; உதவி பொறியாளர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஆக 29, 2024 01:31 AM
ஊத்தங்கரை, ஆக. 29-
ஊத்தங்கரை அருகே, பயன்பாட்டுக்கு வந்த, 2 மாதத்தில், அரசு பள்ளியின் தரமற்ற கட்டட கான்கிரீட் மேல் பூச்சு உதிர்ந்து, 3 மாணவர்கள் காயமடைந்தனர். இது தொடர்பாக, உதவி பொறியாளர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த பெரிய தள்ளப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், 413 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பிளஸ் 1 வகுப்பு அறிவியல் பாடப்பிரிவு மாணவர்கள் சந்தோஷ், மணிகண்டன், வெங்கடேசன் ஆகியோர் நேற்று முன்தினம் காலை வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கான்கிரீட் கூரை பூச்சு உடைந்து விழுந்ததில், அம்மாணவர்களின் தலையில் ரத்த காயம் ஏற்பட்டது.
சம்பவ இடத்தில், ஒன்றிய சேர்மன் உஷாராணி, பி.டி.ஓ., பாலாஜி, மாவட்ட கல்வி அலுவலர் சரவணன், சிங்காரப்பேட்டை இன்ஸ்பெக்டர் பொறுப்பு முருகன், பெரிய தள்ளப்பாடி பஞ்., தலைவர் ராஜாமணி அருணகிரி ஆகியோர் பார்வையிட்டனர்.
திறந்த 2 மாதத்தில் சம்பவம்
இக்கட்டடம், 2021 - 22 ஆண்டு அப்போதைய, காங்., - எம்.பி., டாக்டர் செல்லக்குமாரின், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில், 21.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. கட்டடம் பயன்பாட்டிற்கு வந்த, 2 மாதத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து, மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், 'தரமற்ற முறையில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டடத்தை மறு ஆய்வு செய்து, பிறகு திறக்க வேண்டும். தரமற்ற கட்டடத்தை கட்டிய ஒப்பந்ததாரரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இதேபோல் இவர் கட்டிய கட்டடங்கள் தரமானதாக உள்ளதா என, உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
நிர்வாகம் நடவடிக்கை
இந்நிலையில், பி.டி.ஓ., அலுவலக உதவி பொறியாளர் அருண்ராஜ் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
அவர் தற்போது பர்கூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். மேலும், கட்டட பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரர் சின்னத்தம்பி, இனிவரும் காலங்களில் பணிகள் ஏதும் மேற்கொள்ளா வண்ணம் பெயரை கறுப்பு பட்டியலில் சேர்த்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்று காலை ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் பள்ளிக்கு சென்று மாணவர்களை நலம் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

