/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.4 கோடியில் கட்டி திறப்பு விழாவோடு நின்ற காய்கறி முதன்மை பதப்படுத்தும் நிலையம்
/
ரூ.4 கோடியில் கட்டி திறப்பு விழாவோடு நின்ற காய்கறி முதன்மை பதப்படுத்தும் நிலையம்
ரூ.4 கோடியில் கட்டி திறப்பு விழாவோடு நின்ற காய்கறி முதன்மை பதப்படுத்தும் நிலையம்
ரூ.4 கோடியில் கட்டி திறப்பு விழாவோடு நின்ற காய்கறி முதன்மை பதப்படுத்தும் நிலையம்
ADDED : மே 30, 2024 12:54 AM
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் அருகே, 4 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட, முதன்மை பதப்படுத்தும் நிலையம் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும், 10,773 ஹெக்டேர் பரப்பில் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் பையூர், ஜெகதாப் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி, முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. இவற்றை முறையாக பதப்படுத்தி, பல்வேறு மாவட்டம், மாநிலங்களுக்கு அனுப்பும் வகையில் காவேரிப்பட்டணம் அடுத்த சப்பானிப்பட்டியில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் கடந்த, 2020 மார்ச், 4ல், அலுவலகத்துடன் செயல்படும் முதன்மை பதப்படுத்தும் நிலையத்தை அப்போதைய, அ.தி.மு.க., அரசு திறந்தது. ஆனால் இந்த பதப்படுத்தும் நிலையம் துவங்கிய நாள் முதல், செயல்படவே இல்லை என, அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'விவசாயிகளை வியாபாரிகளாக மாற்றுவதற்காகத்தான், முதன்மை பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும். ஆனால், சப்பானிப்பட்டியில் திறக்கப்பட்ட நிலையம், திறப்பு விழாவோடு நின்று விட்டது. எந்த காய்கறிகளும் கொள்முதல் செய்யப்படவில்லை. டெண்டர் எடுத்தவர்களும் முறையாக பணம் கட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இது குறித்து, 10க்கும் மேற்பட்ட புகார் மனுக்களை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தினர் அளித்தனர். அதற்கும் தீர்வு இல்லை. விவசாயிகள் தயாரிக்கும் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்பதற்காக திறக்கப்பட்ட இந்த முதன்மை பதப்படுத்தும் மையத்தை, உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை செயலாளர் ரவி கூறுகையில், “2020ல் முதன்மை பதப்படுத்தப்படும் நிலையம் திறக்கப்பட்டாலும், கொரோனா பாதிப்பு, டெண்டர் எடுத்தவர்கள் சிலர் லாபம் இல்லை எனக்கூறியது உள்ளிட்ட காரணங்களால் செயல்படுத்தப்பட முடியவில்லை. அதன்பின் டெண்டர் எடுத்த, மில்லட்ஸ் என்ற நிறுவன உரிமையாளர் இறந்து விட்டார். ஆனால், இதுவரை அரசுக்கு கட்டவேண்டிய எந்த தொகையும் யாரும் நிலுவை வைக்கவில்லை. தற்போது டெண்டர் விடப்பட்டு புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் நடத்தவுள்ளது. இன்னும், 10 நாட்களில் சப்பானிப்பட்டி முதன்மை பதப்படுத்தும் நிலையம் முறையாக செயல்படும்,” என்றார்.