/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
/
குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : மே 25, 2024 02:43 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில், ஆர்.சி., தேவாலயம் அருகே, சாலையின் குறுக்கே புதிய ரயில்வே பாலம் அமைக்கும் பணி கடந்த ஆக., மாதம் துவங்கியது. இப்பணி முழுமை பெறாததால், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
பாலம் பணியால், ரயில்வே சுரங்கப்பாதை வழியாக இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ போன்றவை திருப்பி விடப்பட்டுள்ளன. மழை பெய்யும் போது சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி விடுவதால், வாகன ஓட்டிகள் பல கி.மீ., சுற்றி கொண்டு தேன்கனிக்கோட்டை சாலையை அடைய வேண்டியுள்ளது. ரயில்வே நிர்வாகம் மழை நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதில்லை.
புதிய பாலம் பணியையும் விரைந்து முடிக்காமல், ரயில்வே நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. இதை கண்டித்தும், பணிகளை விரைந்து முடிக்கவும், சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கினால், உடனடியாக அதிகளவு மோட்டார்கள் மூலம் தண்ணீரை அகற்ற வலியுறுத்தியும், ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நீலகண்டன் தலைமையில், நேற்று மாலை ரயில்வே ஸ்டேஷன் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. துணைத்தலைவர்கள் சிவக்குமார், ஜெயச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

