/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
33 டன் பட்டாசு பறிமுதல்; கிடங்கிற்கு 'சீல்'
/
33 டன் பட்டாசு பறிமுதல்; கிடங்கிற்கு 'சீல்'
ADDED : அக் 29, 2024 06:49 AM
ஓசூர்: ஓசூர், பெத்தஎலசகிரியை சேர்ந்தவர் சந்திரசேகர்ரெட்டி, 45. இவர், பேகேப்பள்ளியிலுள்ள தன் கிடங்கில், 600 கிலோ பட்டாசுகளை வைக்க மட்டுமே அனுமதி பெற்று, கூடுதலாக பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக, பேகேப்பள்ளி வி.ஏ.ஓ., கோபி, 47, என்பவர், நல்லுார் போலீசில் புகார் செய்தார்.
கிடங்கில் போலீசார் சோதனை செய்தபோது, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 33 டன் அளவு பட்டாசுகள் பதுக்கியது தெரிந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார், சந்திரசேகர்ரெட்டி மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். வருவாய் துறையினர் கிடங்கிற்கு, 'சீல்' வைத்தனர்.
அதே போல, தேன்கனிக்கோட்டை நேரு தெருவை சேர்ந்த பாலமுரளி, 53, டாலர் காலனி பகுதியில் உரிமமின்றி, 120 பட்டாசு பெட்டிகளை பதுக்கியது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனர். பின், ஜாமினில் அவரை விடுவித்தனர்.
ஓசூரில் அனுமதி பெற்ற அளவை விட, கூடுதலாக பட்டாசுகளை பதுக்கிவைத்து, பட்டாசு கடைக்காரர்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், வெடி விபத்து ஏற்பட்டால், பலர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

