ADDED : அக் 28, 2026 05:53 AM
கிருஷ்ணகிரி: ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழாவையொட்டி, கிருஷ்ணகிரியில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் நேற்று முன்தினம் முதல் வரும் நவ., 1 வரை கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில், 'நேர்மையே வளமை' என்ற தலைப்பில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரவி விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில், ஹெட் கான்ஸ்டபிள்கள் மஞ்சுநாதன், மணிவண்ணன், ஸ்ரீதர், அருண்குமார், ரவி மற்றும் டவுன் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், எஸ்.ஐ.,க்கள் கணேஷ், காணிக்கைசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், காவேரிப்பட்டணம் மருதம் கிராமிய நாடகக்கலை குழுவினர் சார்பில், 'நேர்மையே வளமை' என்ற தலைப்பில், கரகாட்டம், விழிப்புணர்வு நாடகம் நடத்தி, உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியை பஸ் ஸ்டாண்டிற்கு வந்த ஏராளமான பயணிகள் கண்டு களித்தனர்.
