/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு
/
அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு
ADDED : அக் 05, 2024 01:00 AM
அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு
ஓசூர், அக். 5-
ஓசூர் காரப்பள்ளி அருகே, 100 கோடி ரூபாய் மதிப்பில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை, மாவட்ட மருத்துவம் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குனர் தர்மர் நேற்று ஆய்வு செய்தார்.
அதன் பின், ஓசூர் அரசு மருத்துவமனை சென்ற அவர், அவசர சிகிச்சை பிரிவு, சுகாதாரம் மற்றும் மருத்துவ சிகிச்சை எவ்வாறு உள்ளது என பார்வையிட்டார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஓசூரில், அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு தலைமை மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இங்கு எவ்வளவு செவிலியர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் தேவை என, மாவட்ட கலெக்டர் மூலமாக அனுப்புமாறு, மாநில அளவில் இருந்து கடந்த வாரம் ஆய்வுக்கு வந்திருந்திருந்த அதிகாரிகள் கூறியுள்ளனர். அதை தயார் செய்து வருகிறோம்.
ஓசூரில் நான்கு டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. அதை கவுன்சிலிங் மூலமாக பெறுவோம். முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், சிறப்பு வாய்ந்த மருத்துவர்களை வெளியில் இருந்து அழைத்து வந்து நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஓசூர் அரசு மருத்துவமனையில் எக்கோ எடுக்கப்படுகிறது. வெளியில் எடுப்பவர்களுக்கு காப்பீட்டு திட்டத்தில் எடுக்க உதவி செய்யப்படுகிறது. நோயாளிகளிடம் இருந்து மருத்துவமனை ஊழியர்கள் பணம் கேட்டால் புகார் செய்யலாம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். டெங்கு பாதிப்பு ஒருவருக்கும் வரக்கூடாது என்ற நோக்கில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு கூறினார்.
அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் ஞானமீனாட்சி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகவேல் உடனிருந்தனர்.