/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து வடமாநில வாலிபர்கள் 5 பேர் மீது தாக்குதல்
/
குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து வடமாநில வாலிபர்கள் 5 பேர் மீது தாக்குதல்
குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து வடமாநில வாலிபர்கள் 5 பேர் மீது தாக்குதல்
குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து வடமாநில வாலிபர்கள் 5 பேர் மீது தாக்குதல்
ADDED : மார் 07, 2024 02:40 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அருகே, குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து, அப்
பகுதி மக்கள், வட மாநிலத்தை சேர்ந்த, 5 வாலிபர்களை தாக்கினர்.
கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில், குழந்தை கடத்தும் வடமாநில கும்பல் உலாவுவதாக 'வாட்ஸாப்'ல் கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவின. இதற்கு மாவட்ட எஸ்.பி., அலுவலகம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நேற்று மதியம் கிருஷ்ணகிரி அடுத்த செம்படம்புதுார் பஞ்., பகுதியில், வடமாநில வாலிபர்கள் மூன்று பேர் நின்றிருந்தனர். அப்போது செம்படமுத்துாரிலிருந்து எண்ணேக்கொள் நோக்கி சென்ற பெண்ணிடமிருந்த குழந்தையை, பறிக்க முயன்றதாக கூறி, அப்பகுதியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர் அந்த மூவரையும் தாக்கி, அவர்கள் வந்த ஆட்டோவையும் அடித்து உடைத்தனர். இக்காட்சிகள் வைரலாகின.
அதேபோல் பெத்ததாளப்பள்ளி பஞ்., மாதேப்பட்டி சாலை அருகே மற்றும் துரிஞ்சிப்பட்டி அருகே நடந்து சென்ற, வடமாநில வாலிபர்கள் இருவர், குழந்தை கடத்தும் கும்பல் என கருதி அப்பகுதியினர் தாக்கினர்.
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், படுகாயமடைந்த வாலிபர்களை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். குழந்தையை வடமாநில வாலிபர் கடத்துவதை தடுத்தபோது, தன்னை தாக்கியதாக கூறி, அக்குழந்தையின் தாய் சவுமதி, 25, என்பவரும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில், தாக்கப்பட்ட, வடமாநில வாலிபர்கள், ஐந்து பேரும் அசாம் மாநிலம், கவுகாத்தியை சேர்ந்த கமல்ஹூசைன், 30, நிசாம்அலி, 26, முகம்மதுமெசுதீன், 30, ஆஷ்முகமது, 27, சோகித்அலி என தெரிந்தது. அவர்கள் ஐவரும் கடந்த, 3 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி அடுத்த
தேவசமுத்திரத்தில் தங்கி, ஆட்டோவில் சென்று குப்பை, மது பாட்டில்களை பொறுக்கி, அதில் வருமானம் பெற்று
வந்தது தெரிந்தது.
இது குறித்து மாவட்ட எஸ்.பி.,
தங்கதுரை கூறுகையில், “குழந்தைகள் கடத்தப்படுவதாக கூறி வரும் தகவல்கள் தவறு. அதுபோல செய்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல வடமாநில இளைஞர்களும், தேவையின்றி வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும்,” என்றார். வடமாநில வாலிபர்கள் மீது பெத்ததாளப்பள்ளி, செம்படமுத்துார் வி.ஏ.ஓ.,க்கள் அளித்த புகார் படியும், சவுமதி தரப்பினர் அளித்த புகார் படியும், கிருஷ்ணகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

