/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
6 கிலோவில் முட்டைக்கோஸ் விவசாயிகள் முயற்சியால் விற்பனை
/
6 கிலோவில் முட்டைக்கோஸ் விவசாயிகள் முயற்சியால் விற்பனை
6 கிலோவில் முட்டைக்கோஸ் விவசாயிகள் முயற்சியால் விற்பனை
6 கிலோவில் முட்டைக்கோஸ் விவசாயிகள் முயற்சியால் விற்பனை
ADDED : செப் 18, 2025 02:20 AM
தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டையில் அதிக எடையில் விளைந்து விற்பனையாகாமல் இருந்த, முட்டைக்கோஸ் விற்பனையானது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த சொப்புக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா, 50, விவசாயி. சூளகிரியிலுள்ள நர்சரியில், 30,000 ரூபாய்க்கு நாற்றுகளை வாங்கி, தன், 2 ஏக்கர் நிலத்தில் முட்டைக்கோஸ் பயிரிட்டிருந்தார்.
உரமிடுவது, பராமரிப்பு என மொத்தம், 3 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருந்தார். முட்டைக்கோஸ் வழக்கமான எடையில் இல்லாமல், 5 முதல், 6 கிலோ அளவிற்கு விளைந்திருந்தது. இது உணவுக்கு உகந்ததாக இருக்காது எனக்கூறி, அதை வியாபாரிகள் வாங்க மறுத்தனர். அதனால், அதை அழிக்கும் முடிவுக்கு விவசாயி முனியப்பா தள்ளப்பட்டார்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க, மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டி தலைமையில், ஏராளமான விவசாயிகள் சூளகிரியிலுள்ள நர்சரி பண்ணைக்கு சென்று, அதன் உரிமையாளரிடம் முறையிட்டனர். அவரும் வியாபாரி ஒருவரை, முனியப்பா நிலத்திற்கு அனுப்பினார். நிலத்தில் மொத்தம், 1,500 மூட்டை முட்டைக்கோஸ் சாகுபடியான நிலையில், அவற்றில் பெரும்பாலானவை பறிக்க தாமதமானதால் கெட்டுப்போனது. மீதமிருந்த, தலா, 50 கிலோ எடையுள்ள, 400 மூட்டை முட்டைக்கோசை, 80,000 ரூபாய்க்கு வியாபாரி வாங்கிச்சென்றார்.
இது குறித்து, கணேஷ்ரெட்டி கூறுகையில்,''நர்சரி உரிமையாளரான சிவா, வெளியிலிருந்து வாங்கி வந்துதான், முட்டைகோஸ் விதையை விற்பனை செய்ததாக கூறினார். இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரிடம் கூறியவுடன், விவசாயி முனியப்பாவிற்கு, 20,000 ரூபாயை சிவா வழங்கினார். மேலும், வியாபாரியை வரவழைத்து, 400 மூட்டைகளை வாங்கி செல்ல ஏற்பாடு செய்தார். சரியான அளவில் முட்டைகோஸ் விளைந்திருந்தால், 20 லட்சம் ரூபாய் வரை விவசாயி முனியப்பாவிற்கு லாபம் கிடைத்திருக்கும்,'' என்றார்.