/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எச்சில் இலை எடுத்த மாணவி சுதந்திர தின விழாவில் சர்ச்சை
/
எச்சில் இலை எடுத்த மாணவி சுதந்திர தின விழாவில் சர்ச்சை
எச்சில் இலை எடுத்த மாணவி சுதந்திர தின விழாவில் சர்ச்சை
எச்சில் இலை எடுத்த மாணவி சுதந்திர தின விழாவில் சர்ச்சை
ADDED : ஆக 15, 2025 11:30 PM

கிருஷ்ணகிரி:சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில், உணவு பரிமாறும் இடத்தில், பள்ளி மாணவி எச்சில் இலை எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், 79வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
கலெக்டர் தினேஷ்குமார் கொடியேற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதில், எஸ்.பி., தங்கதுரை மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட விளையாட்டரங்கின் ஒரு அறையில் அரசு அலுவலர்கள், போலீசார் உள்ளிட்டோருக்கு காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில, உணவு பரிமாறுவதற்கு ஹோட்டலில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டனர்.
நேற்று காலை, 9:25 மணிக்கு அங்கு சாப்பிட்டவர்களின் எச்சில் இலையை, கிருஷ்ணகிரி, கட்டிகானப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் எடுத்துள்ளார்.
அந்த மாணவியிடம் விசாரித்தபோது, 'இலை எடுக்க யாரும் இல்லை என, ஒரு சார் கூப்பிட்டார். அதனால் வந்தேன்' என, கூறியுள்ளார்.
இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபாலன் கூறுகையில், “இதுகுறித்து எனக்கு தகவல் தெரியவில்லை. உணவு பரிமாற, இலை எடுக்க தனித்தனியாக ஆட்கள் நியமிக்கப்பட்டனர். இருப்பினும் பள்ளி மாணவியை இலை எடுக்க வைத்தது குறித்து விசாரிக்கப்படும்,” என்றார்.