/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'காவிரி குறுக்கே ராசிமணலில் அணை கட்டினால் டெல்டா மாவட்டம் பாலைவனமாக மாறும்'
/
'காவிரி குறுக்கே ராசிமணலில் அணை கட்டினால் டெல்டா மாவட்டம் பாலைவனமாக மாறும்'
'காவிரி குறுக்கே ராசிமணலில் அணை கட்டினால் டெல்டா மாவட்டம் பாலைவனமாக மாறும்'
'காவிரி குறுக்கே ராசிமணலில் அணை கட்டினால் டெல்டா மாவட்டம் பாலைவனமாக மாறும்'
ADDED : அக் 24, 2024 03:26 AM
கிருஷ்ணகிரி: ''காவிரியின் குறுக்கே, ராசி மணல் பகுதியில், கர்நாடகா அரசு அணை கட்டினால், டெல்டா மாவட்டம் பாலைவனமாக மாறும்,'' என, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் தனபாலன் தலைமையில், 45 விவசாயிகள், நாகை மாவட்டத்தில் இருந்து, மேகதாது அணையால் கடைமடை விவசாயம் பாதிக்கும் என, விழிப்புணர்வு யாத்திரை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் நேற்று, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் தலைமையில், விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பின்னர் நிருபர்களிடம், தனபாலன் கூறியதாவது:கர்நாடக அரசு வஞ்சகமாக, தண்ணீரை திறந்து விடாத காரணத்தால், காவிரி டெல்டா பகுதி பாலைவனமாக மாறுவது மட்டுமின்றி, விவசாயம் கைவிடப்படும் சூழல் நிலவுகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பு, வாரியத்தின் உத்தரவு, ஒழுங்காற்று பரிந்துரை அடிப்படையில், கர்நாடகா ஒருமுறை கூட நீரை திறக்கவில்லை. அணை பாதுகாப்பு கருதி, வெள்ளநீரை வெளியேற்றும் நிலையில்தான், தமிழகத்திற்கு காவிரிநீர் வருகிறது. இதில், புதிய அணை கட்டுமானம் என்பது, கடைமடை பாசனத்தை கேள்விக்குறியாக்கி விடும். இதனால் பாதிக்கப்படும் நாகை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள், கர்நாடகா விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் யாத்திரையை துவங்கி உள்ளோம்.காமராஜர் ஆட்சி காலத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்து, ராசிமணல் உட்பட தண்ணீர் சேமிக்கக்கூடிய இடங்கள் ஆராயப்பட்டது. அப்போது கர்நாடகாவில் ஒரு அணை கூட இல்லை. ஆனால் தற்போது, காவிரியில், 182 டி.எம்.சி., நீரை கூட கொடுக்க முடியாத வகையில், கர்நாடகா அணைகளை கட்டியுள்ளது. காவிரியிலிருந்து மேட்டூருக்கு வரும், 60 சதவீத நீர், கேரளா மாநிலம் வயநாட்டில் மழை பொழிந்து, கபிணி அணை மூலமாக வருகிறது. கர்நாடகாவில், 20 கி.மீ., மட்டுமே பாய்ந்து, தமிழக எல்லைக்கு வரும் நீரை, தடுக்கும் திட்டம் தான் மேகதாது. இதை, தமிழக அரசு சட்டபூர்வமாக, கடுமையாக எதிர்க்கும் நிலையில்தான் ராசிமணலில் அணை கட்ட வேண்டும் என்ற பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.காவிரி என்பது பற்றாக்குறை நதி. இதில், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பருவமழை அதிகம் பெய்யும். கர்நாடக அரசு, நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் தண்ணீரை திறந்து விட்டிருந்தால், ஒரு சொட்டு தண்ணீர் கூட கடலுக்கு சென்றிருக்காது. கர்நாடகா முறையாக நீரை திறக்காமல், வெள்ள நீரை வெளியேற்றும் போது, அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஒரு சில விவசாயிகள் விளம்பர நோக்கில், தமிழக அரசால் கைவிடப்பட்ட ராசிமணல் திட்டத்தை செயல்படுத்த பேசி வருகின்றனர். வெள்ள நீரை வெளியேற்றும்போது தான், அந்த நீரை சேமித்து, பாசனம் செய்து வருகிறோம். அதற்கும் உலை வைக்கும் வகையில், ஒரு சிலர் ராசி மணல் பற்றி பேசி வருவது வேதனைக்குறியது. இவ்வாறு, அவர் கூறினார்.