ADDED : ஜூலை 10, 2026 04:37 AM

கெலமங்கலம்:கிருஷ்ணகிரி
மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம் பெட்டமுகிலாளம் பஞ்.,க்கு உட்பட்ட
கோட்டையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சித்தாபுரம் நடுநிலைப்
பள்ளி உள்ளிட்ட மலை கிராம பள்ளிகளில் மாவட்ட கல்வி அலுவலர் நரசிம்மன்
ஆய்வு செய்தார்.
அப்போது, 8ம் வகுப்பு படித்து, 9ம் வகுப்பு சேராமல்
இடைநின்ற மாணவியை கண்டறிந்து அறிவுரை வழங்கி, உனிசெட்டி அரசு
உயர்நிலைப் பள்ளியில், தொடர்ந்து கல்வி கற்க ஏற்பாடு செய்ய, வட்டார
கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், 8ம் வகுப்பு
படிக்கும் அனைத்து மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசிப்புத்திறனை
ஆய்வு செய்தார். அனைத்து மாணவர்களும் அடிப்படை அறிவு பெற்றுள்ளதை
உறுதிப்படுத்துமாறு உத்தரவிட்டார். எட்டாம் வகுப்பு படிக்கும்
அனைத்து மாணவர்களும், மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைக்கான
தேர்வில், தேர்ச்சி பெறும் வகையில், சிறந்த முறையில் பாடங்களை கற்க
கூறினார். வட்டார கல்வி அலுவலர்கள் லோகேஷ், ஆசிரியர் பயிற்றுனர்
சுரேஷ் குமார்
உடனிருந்தனர்.
