காதல் விவகாரத்தில் இருதரப்பினர் தகராறில் ஐந்து பேருக்கு 'காப்பு'
காதல் விவகாரத்தில் இருதரப்பினர் தகராறில் ஐந்து பேருக்கு 'காப்பு'
ADDED : நவ 12, 2026 01:57 AM
ஓசூர்: ஓசூர் வசந்த் நகரை சேர்ந்தவர், 18 வயது வாலிபர்; கூலித்தொழிலாளி. இவர், 17 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார்.
அப்பெண்ணின் சகோதரியை, முனிதேவி நகரை சேர்ந்த பிளம்பர் சக்திவேல், 23, என்பவர் காதலித்தார். இதற்காக, கூலித்தொழிலாளி காதலித்த பெண்ணுடன், சக்திவேல் பேச முயன்றார். அதை அப்பெண் தவிர்த்து வந்தார். இதனால், அப்பெண்ணை பற்றி சக்திவேல், அவதுாறாக பேசியுள்ளார். இதையறிந்த கூலித்தொழிலாளி, தன் காதலியை பற்றி, எப்படி தவறாக பேசலாம் எனக்கூறி, சக்திவேலிடம் தகராறு செய்தார். இதனால் இருவருக்கும் இடையே கடந்த, 9ம் தேதி இரவு, 9:00 மணிக்கு தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல் மற்றும் அவரது தரப்பினர், கூலித்தொழிலாளியை கற்களால் தாக்கி மிரட்டினர்.
கூலித்தொழிலாளி புகார்படி, ஓசூர் முனிதேவி நகரை சேர்ந்த சக்திவேல், அதே பகுதியை சேர்ந்த மாநகராட்சி தண்ணீர் தொட்டி ஆப்பரேட்டர் மணிகண்டன், 30, ஆகிய இருவரை, ஹட்கோ போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, வெங்கடேசன், 21, என்பவரை தேடி வருகின்றனர்.
அதேபோல், தன்னை தாக்கியதாக சக்திவேல் கொடுத்த புகார்படி, ஓசூர் பழைய வசந்த் நகரை சேர்ந்த மீன் கடை உரிமையாளர் ராஜா, 36, மற்றும் 18 வயது கூலித்தொழிலாளி, பாகலுார் சாலை சதாசிவப்பா காலனியை சேர்ந்த பால் பண்ணை ஊழியர் மாதேஷ், 25, ஆகிய, 3 பேரை போலீசார் கைது
செய்தனர்.
