/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காந்தி நினைவு மண்டப அறக்கட்டளை உரிமைக்கு மோதும் மாஜி மாவட்ட தலைவர்களால் பரபரப்பு
/
காந்தி நினைவு மண்டப அறக்கட்டளை உரிமைக்கு மோதும் மாஜி மாவட்ட தலைவர்களால் பரபரப்பு
காந்தி நினைவு மண்டப அறக்கட்டளை உரிமைக்கு மோதும் மாஜி மாவட்ட தலைவர்களால் பரபரப்பு
காந்தி நினைவு மண்டப அறக்கட்டளை உரிமைக்கு மோதும் மாஜி மாவட்ட தலைவர்களால் பரபரப்பு
ADDED : டிச 29, 2024 01:15 AM
காந்தி நினைவு மண்டப அறக்கட்டளை உரிமைக்கு
மோதும் மாஜி மாவட்ட தலைவர்களால் பரபரப்பு
கிருஷ்ணகிரி, டிச. 29-
காவேரிப்பட்டணத்தில் உள்ள காந்தி நினைவு மண்டப அறக்கட்டளை யாருக்கு சொந்தம் என்பதில் முன்னாள் மாவட்ட காங்., தலைவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், சேலம் சாலையில், 38 சென்ட் பரப்பில் காந்தி நினைவு மண்டப அறக்கட்டளை உள்ளது. இதற்கு கிருஷ்ணகிரி மாவட்ட, காங்., முன்னாள் தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான சுப்பிரமணி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் தலைவரும், காங்., செயற்குழு உறுப்பினருமான காசிலிங்கத்திற்கிடையே மோதல் வலுத்துள்ளது. இரு தரப்பும் கடந்த, 25ல், காவேரிப்பட்டணம் போலீசில் ஒருவர் மீது ஒருவர் புகாரளித்தனர்.
காந்திநினைவு மண்டப அறக்கட்டளை, காங்., கட்சிக்கு சொந்தம் என சுப்பிரமணி தரப்பினர் கூறினர். இதற்கு காந்தி நினைவு மண்டப அறக்கட்டளையின் தலைவர் காசிலிங்கம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமாக இருந்தபோது காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,க்கு காந்தி நினைவு மண்டபம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டது. கடந்த, 1985ல் அது அறக்கட்டளையாக மாறியது. கடந்த, 1997ல் உறுப்பினராகி, 1998 முதல் தற்போது வரை அறக்கட்டளை தலைவராக உள்ளேன். இதில் உறுப்பினராக இருந்த சுப்பிரமணி முறைகேடாக தன் பெயரில் மின் இணைப்பு மற்றும் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை அறக்கட்டளையிலிருந்து நீக்கினோம். காந்தி நினைவு மண்டபம் அறக்கட்டளைக்கே சொந்தம் என சார்பு நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது. இதில், காங்., கட்சிக்கோ, தனி நபர்களுக்கோ உரிமை இல்லை. சுப்பிரமணி தரப்பினர் காந்தி மண்டப நிலத்தை அபகரிக்கும் நோக்கில் காங்., கட்சி பெயரை கூறி வருகின்றனர். அவர்கள் கூறுவது போல் அவர்களிடம் எந்த ஆவணமும் இல்லை. இருப்பினும் அறக்கட்டளையை செயல்பட விடாமல் எங்களை தொடர்ந்து தடுத்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
காந்தி நினைவு மண்டப அறக்கட்டளை பொருளாளர் கே.வி.எஸ்., தணிகாசலம், செயலாளர் ராமன், சம்பத்குமார், பூபாலன், சுப்ரமணி, ஜெகன்நாதன், தேவராஜ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இது குறித்து முன்னாள் மாவட்ட காங்.,தலைவர் சுப்பிரமணி கூறுகையில், ''காந்தி நினைவு மண்டபம் அறக்கட்டளைக்கு சொந்தமா அல்லது காங்.,க்கு சொந்தமா என்பது குறித்து நான் பேசவில்லை. அதை நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்து கொள்வோம். ஆனால், அதற்குள் அறக்கட்டளைக்குள் அத்துமீறி நுழைவதாக காசிலிங்கம் தரப்பு மீது புகாரளிக்க சென்ற எங்களை, காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் சரவணன் அவதுாறாக பேசி, 'காங்., கட்சிக்காரர்களுக்கு வேறு வேலை இல்லையா' என ஏளனமாக பேசினார். காங்., கட்சி மேலிட உத்தரவுப்படி நாங்கள் ஓரிரு நாளில் போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்,'' என்றார்.
காந்தி நினைவு மண்டப அறக்கட்டளை விவகாரத்தில், காங்., கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி, 7 ஆண்டுகளாக பூட்டி வைத்துள்ளனர். இவர்களது நடவடிக்கையால் அறக்கட்டளை செயல்படாமல் உள்ளது என அப்பகுதியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.