ADDED : செப் 30, 2024 01:01 AM
அரசு ஊழியர் சங்க வட்ட மாநாடு
ஓசூர், செப். 30-
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க, ஓசூர் வட்ட மாநாடு, தலைவர் சிவா தலைமையில் நடந்தது. இணை செயலாளர் ஹேமாநந்தினி தேவி அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார். மாவட்ட தலைவர் சந்திரன், செயலாளர் கல்யாண சுந்தரம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணி புரியும், 3.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம், ஒய்வூதியம் வழங்க வேண்டும். ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், 278 பணியிடங்களை உருவாக்க வேண்டும். நீண்ட காலமாக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் தண்ணீர் விடும் ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள், அரசு மருத்துவமனை, கிராம சுகாதார நிலைய ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைவராக திம்மராஜ், செயலாளராக ஹேமா நந்தினிதேவி, பொருளாளராக அருண்குமார் உட்பட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.