/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் சர்வதேச விமான நிலையத்திற்கு 2,980 ஏக்கர் நிலம் எடுக்க அரசு மும்முரம்
/
ஓசூர் சர்வதேச விமான நிலையத்திற்கு 2,980 ஏக்கர் நிலம் எடுக்க அரசு மும்முரம்
ஓசூர் சர்வதேச விமான நிலையத்திற்கு 2,980 ஏக்கர் நிலம் எடுக்க அரசு மும்முரம்
ஓசூர் சர்வதேச விமான நிலையத்திற்கு 2,980 ஏக்கர் நிலம் எடுக்க அரசு மும்முரம்
ADDED : டிச 11, 2025 05:32 AM

ஓசூர்: ஓசூரில், பன்னாட்டு விமான நிலையம் அமைக்க, 2,980 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை அரசு துவங்கி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், ஆண்டுக்கு, 30 மில்லியன் பயணியரை கையாளும் வகையில், 2,000 ஏக்கரில் பன்னாட்டு பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் கடந்தாண்டு சட்டசபையில் அறிவித்தார்.
அதற்காக, ஓசூர் அருகே பேலகொண்டப்பள்ளியில் விமான ஓடுபாதையுடன் உள்ள 'தால்' நிறுவனம் மற்றும் அதை சுற்றியுள்ள இடமும், ஓசூர் நகரின் வடகிழக்கில் முத்தாலியை சுற்றியுள்ள ஓசூர், சூளகிரி தாலுகாவிற்குள் வரும் இடமும் தேர்வு செய்யப்பட்டு, தமிழக தொழில்துறை மேம்பாட்டு கழக செயலர் மூலம், இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது.
இந்த இரு இடங்களும் சாத்தியமானவை என, இந்திய விமான நிலைய ஆணையம் பதிலளித்தது. அதன் பின், தமிழக தொழில்துறை மேம்பாட்டு கழகம், இரு இடங்களையும் ஆய்வு செய்ய ஆலோசகரை நியமித்தது.
இந்த ஆய்வில், 'தால்' மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், 348 வகையான பொருட்கள் தடையாக இருப்பதாகவும், முத்தாலி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், 71 வகையான பொருட்கள் மட்டும் தடையாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டது.
அரசு நிலங்களின் அதிகமான பரப்பளவு, பட்டா நிலங்களின் விலை, தேசிய மற்றும் மாநில, மாவட்ட சாலைகள், அந்த இடத்தின் வழியாக செல்லும் உயர்மின் அழுத்த பாதை போன்ற பல்வேறு சாதகங்கள் இருப்பதால், முத்தாலி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் தான், விமான நிலையம் அமைக்க உகந்ததாக இருக்கும் என, ஆக., 22ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அந்த இடத்தில் விமான நிலையத்திற்கு அனுமதி கேட்டு, தமிழக அரசு, இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி, அனுமதிக்காக காத்திருக்கிறது.
ஓசூர் விமான நிலையத்திற்காக, ஓசூர், சூளகிரி தாலுகாவில் நிலம் கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பலவனப்பள்ளி, முத்தாலி, அடவனப்பள்ளி, தாசப்பள்ளி, பெத்த முத்தாலி, அட்டூர், அலேநத்தம், காருப்பள்ளி, நந்திமங்கலம், சூடகொண்டப்பள்ளி, வெங்கடேசபுரம், மிடுதேப்பள்ளி ஆகிய கிராமங்களில், அரசு புறம்போக்கு நிலங்கள் மட்டும், 845 ஏக்கர் கையகப்படுத்தப்பட உள்ளது.
அதேபோல், விவசாயம் செய்யாத பட்டா நிலங்கள், விவசாய நிலங்கள் மொத்தம், 2,134 ஏக்கர் என மொத்தம், 2,980 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்காக, தமிழக தொழில்துறை மேம்பாட்டு கழகம் சார்பில், சென்னை நில நிர்வாக ஆணையருக்கு கடந்த அக்., மாதம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட கலெக்டர் நிலத்தை கையகப்படுத்த, அரசிடமிருந்து நிர்வாக அனுமதி வழங்க கோரப்பட்டுள்ளது.

