/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கனமழையால் 153 வீடுகள் சேதம்; 31 கால்நடைகள் பலி கிருஷ்ணகிரியில் மீட்பு பணிகள் தீவிரம்
/
கனமழையால் 153 வீடுகள் சேதம்; 31 கால்நடைகள் பலி கிருஷ்ணகிரியில் மீட்பு பணிகள் தீவிரம்
கனமழையால் 153 வீடுகள் சேதம்; 31 கால்நடைகள் பலி கிருஷ்ணகிரியில் மீட்பு பணிகள் தீவிரம்
கனமழையால் 153 வீடுகள் சேதம்; 31 கால்நடைகள் பலி கிருஷ்ணகிரியில் மீட்பு பணிகள் தீவிரம்
ADDED : டிச 04, 2024 01:34 AM
கிருஷ்ணகிரி, டிச. 4-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் கனமழையால், 153 வீடுகள் சேதமடைந்தன. மீட்பு பணிகளை பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
வெள்ளக்காடு
வங்கக்கடலில் உருவான, 'பெஞ்சல்' புயலால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த நவ., 30 முதல் தொடர் மழை பெய்தது. ஊத்தங்கரை, போச்சம்பள்ளியில் கடந்த, 300 ஆண்டுகளில் இல்லாத வகையில் வரலாறு காணாத அளவு அதிகமழை பெய்தது. இதையடுத்து இப்பகுதிகளில் ஏரிகள் நிரம்பி, உபரிநீர் சாலைகள், வணிக வளாகங்கள், நீதிமன்றம், குடியிருப்பு பகுதிகள் என அனைத்து இடங்களிலும் புகுந்து வெள்ளக்காடானது. ஊத்தங்கரையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த, 40க்கும் மேற்பட்ட டூரிஸ்ட் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மீட்கப்பட்டன.
தொடர்ந்து, 3 நாட்களாக மழை பெய்த நிலையில், நேற்று காலையிலும் மழை தொடர்ந்தது. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட, 1,314 பேர், 7 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு, நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை, நேற்று முன்தினம் துணை முதல்வர் உதயநிதி, எதிர்கட்சி தலைவர் இ.பி.எஸ்., மற்றும் அதிகாரிகள் சந்தித்து, குறைகளை கேட்டனர்.
மீட்பு பணிகள் துரிதம்
தொடர்ந்து, 3 நாட்களாக மழை பெய்த நிலையில், 4ம் நாளான நேற்று காலை, 10:00 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வெயில் தலைகாட்ட துவங்கியது. இதையடுத்து மாவட்ட பேரிடர் மீட்பு கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், அலுவலர்களை முடுக்கி விட்டு, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி பகுதிகளில் வெள்ள பாதிப்பு குறித்து விசாரித்து மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். ஊத்தங்கரை அடுத்த மல்லம்பட்டி ஏரி, கொண்டம்பட்டி ஏரி நிரம்பி உடையும் தருவாயில் இருந்த நிலையில் அதன் கோடி பகுதியில் பொக்லைன் மூலம் உடைத்து நீரை அதிகாரிகள் வெளியேற்றினர்.
ஏரிகள் கண்காணிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 3 நாட்களில் பெய்த மழையில், 26 குடிசை, ஓட்டு வீடுகள் முற்றிலும் இடிந்தன. மேலும், 127 வீடுகள் சேதம் உள்பட, மாவட்டத்தில், 153 வீடுகள் சேதமாகின. மேலும், 31 கால்நடைகள் மற்றும் கோழிப்பண்ணைகளில் இருந்த, 15,021 கோழிகளும் இறந்தன. இது தவிர பல கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. நேற்று முன்தினம் இரவு வரை வெள்ளத்தால், மனித உயிரிழப்புகள் இல்லை எனவும், தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பேரிடர் மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், மாவட்டத்தில் நிரம்பியுள்ள ஏரிகளை கண்காணித்து, உடையும் தருவாயில் உள்ள ஏரிகளிலிருந்த நீரை வெளியேற்றும் பணியில், ஈடுபட்டிருப்ப
தாகவும் தெரிவித்தனர்.