/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போக்குவரத்துக்கு தகுதியற்ற தேசிய நெடுஞ்சாலை ஆறு மாதம் சுங்க கட்டண வசூலை நிறுத்த வலியுறுத்தல்
/
போக்குவரத்துக்கு தகுதியற்ற தேசிய நெடுஞ்சாலை ஆறு மாதம் சுங்க கட்டண வசூலை நிறுத்த வலியுறுத்தல்
போக்குவரத்துக்கு தகுதியற்ற தேசிய நெடுஞ்சாலை ஆறு மாதம் சுங்க கட்டண வசூலை நிறுத்த வலியுறுத்தல்
போக்குவரத்துக்கு தகுதியற்ற தேசிய நெடுஞ்சாலை ஆறு மாதம் சுங்க கட்டண வசூலை நிறுத்த வலியுறுத்தல்
ADDED : அக் 26, 2024 08:43 PM

ஓசூர்:கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளியில் துவங்கி, ஓசூர் வழியாக கிருஷ்ணகிரிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அங்கிருந்து, மறு மார்க்கத்திலும் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில், தினமும், 70,000 வாகனங்களுக்கு மேல் செல்கின்றன.
விபத்து ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு, ஓசூர் சிப்காட் ஜங்ஷன், கோபசந்திரம், சாமல்பள்ளம், சுண்டகிரி, மேலுமலை மற்றும் கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகே என மொத்தம், ஆறு இடங்களில் மேம்பாலம் கட்டும் பணி கடந்தாண்டு அக்டோபரில் துவங்கியது.
ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இன்னும் பாலப் பணிகள் நிறைவு பெறவில்லை. ஆறு இடங்களிலும், சாலையின் நடுவே பாலம் அமைக்க, பள்ளம் தோண்டப்பட்டுஉள்ளதால், சர்வீஸ் சாலை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஆட்கள் பற்றாக்குறை, மண் தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களை காட்டி, பணி இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. பணி முடிய இன்னும் ஆறு மாதங்களாகும் என, அதிகாரிகள் கூறுகின்றனர். சர்வீஸ் சாலையும் குறுகலாக உள்ளதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
கடந்த, 21ம் தேதி சூளகிரி அருகே அட்டகுறுக்கி, கோனேரிபள்ளி ஆகிய இரு இடங்களில், சாலையின் இருபுறமும் மழைநீர் தேங்கியதால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சமீபத்தில் பெய்த மழையால், போலுப்பள்ளி, மேலுமலை பகுதியில் பாலம் வேலை நடக்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு, 17 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்ல, மூன்று மணி நேரத்திற்கும் மேலானது.
பாலப் பணிகளின் மந்த கதியால் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், தொழிலாளர்கள், மருத்துவமனை செல்ல வேண்டிய நோயாளிகள், பயணியர் என அனைத்து தரப்பினரும் அவதியடைகின்றனர். இந்த பகுதியில், 12 மாதங்களில், 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
போலீசார் அழுத்தம் கொடுத்தும், பாலப் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்த நிறுவனங்கள் முன்வரவில்லை.
தகுதியில்லாத நிலையில் தேசிய நெடுஞ்சாலை உள்ளதால், அடுத்த ஆறு மாதத்திற்கு டோல் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி டோல்கேட்டில், ஒரு நாளுக்கே பல லட்சம் ரூபாய் வருவாய் வருகிறது. ஆனால், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக சாலையில் பயணிக்கும் வசதியை மட்டும் செய்து கொடுக்கவில்லை.
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், ஊருக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் அதிகரிக்கும்.
கிருஷ்ணகிரி காங்., -- எம்.பி., கோபிநாத் கூறுகையில், ''கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்டில் நடந்த சட்டசபை மனுக்கள் குழு கூட்டத்தில், பல்வேறு எம்.எல்.ஏ.,க்கள் முன்னிலையில், கிருஷ்ணகிரி டோல்கேட்டை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினேன்.
''டோல்கேட்டில் கட்டணம் வசூல் செய்யக் கூடாது என வலியுறுத்துவோம்,'' என்றார்.
டோல்கேட் நிர்வாகத்தினர் கூறுகையில், 'சில மாதங்களுக்கு டோல் கட்டணம் வசூல் செய்ய கூடாது என்பதை, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தான் முடிவு செய்ய முடியும்' என்றனர்.