/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரேஷன்கடைகளில் புதிய நடைமுறையால் நீண்ட நேரம் காத்திருப்பு
/
ரேஷன்கடைகளில் புதிய நடைமுறையால் நீண்ட நேரம் காத்திருப்பு
ரேஷன்கடைகளில் புதிய நடைமுறையால் நீண்ட நேரம் காத்திருப்பு
ரேஷன்கடைகளில் புதிய நடைமுறையால் நீண்ட நேரம் காத்திருப்பு
ADDED : ஜூன் 20, 2025 12:56 AM
கிருஷ்ணகிரி, ரேஷன் கடைகளில் கைரேகை இயந்திரத்துடன் எலக்ட்ரானிக் தராசை இணைத்துள்ளதால், பயனாளிகள் பொருள் வாங்க நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்தால் நடத்தப்படும் முழுநேர ரேஷன் கடைகள், 34, பகுதிநேர ரேஷன் கடைகள், 2, கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும் முழுநேர ரேஷன் கடைகள், 524, பகுதி நேர ரேஷன் கடைகள், 504, சுய உதவிக்குழுக்களால் நடத்தப்படும் முழுநேர ரேஷன் கடைகள், 30 என மொத்தம், 1,094 ரேஷன் கடைகள் உள்ளன. இதன் மூலம் மாவட்டத்தில், 5 லட்சத்து, 62 ஆயிரத்து, 894 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுகின்றனர்.
கடந்த மாதம் முதல், அனைத்து ரேஷன் கடைகளிலும் கைரேகை இயந்திரத்துடன், எலக்ட்ரானிக் தராசை இணைத்துள்ளனர். இதன் மூலம், ஒருவருக்கு, 20 கிலோ அரிசியை இயந்திரத்தில் பதிவு செய்தால், அதை எடை போட்டு பயனாளிக்கு வழங்கினால் தான் அடுத்து, சர்க்கரை வழங்க பதிவு செய்ய முடியும். இந்த புதிய நடைமுறையால், ஒரு கார்டுதாரருக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு ஆகியவற்றை வழங்க, 10 முதல், 15 நிமிடம் ஆகிறது. இதனால் ஒரு நாளைக்கு, 50 கார்டுதாரர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்களை வழங்க முடிகிறது. ரேஷன் பொருள் வாங்க, 10 பேர் வரிசையில் நின்றால், 10வது நபர் ரேஷன் பொருள் வாங்க ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டி உள்ளதால், மிகவும் சிரமப்படுகின்றனர். இன்டர்நெட் இணைப்பு சரியாக கிடைக்காத நேரத்தில், ஒருவர் ரேஷன் பொருள் வாங்க, 2 மணி நேரம் வரையும் காத்திருக்கின்றனர்.
'விரைவில் இப்பிரச்னை சரியாகும்'
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணியிடம் கேட்டபோது, ''எடையளவு குறித்த புகாரால் கைரேகை இயந்திரத்துடன், எலட்க்ரானிக் தராசு, புளு டூத் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், சரியான எடையளவில் பொருள் இருந்தால் மட்டுமே, பில் வரும். இதன் மூலம், பொதுமக்கள் சரியான அளவில், பொருளை வாங்கிக் கொள்ளலாம். இதற்காக, 5 நிமிடம் கூடுதலாக காத்திருப்பதில் தவறு இல்லை. இதற்கு முன்பு, 2 முறை கைரேகை வைக்க வேண்டும். தற்போது ஒரு முறை வைத்தாலே போதும். மேலும், மாவட்டம் முழுவதுமுள்ள ரேஷன் கடைகளில், 114 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் பயிற்சி குறைவால், பொருள் வழங்குவதில் தாமதமாகலாம். விரைவில் இப்பிரச்னை சரியாகி விடும்,'' என்றார்.