/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக தேரோட்டம்
/
தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக தேரோட்டம்
ADDED : மார் 19, 2025 01:37 AM
தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக தேரோட்டம்
அரூ:அரூர் அருகே, தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் மாசிமக தேரோட்டம் நேற்று, விமர்சையாக- நடந்தது.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை தீர்த்த
கிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்ட விழா கடந்த, 11ல், விநாயகர் பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 12ல், கொடியேற்றமும், 16ல், சுவாமி திருக்கல்யாணமும் நடந்தது. விழாவின், முக்கிய நிகழ்வான மாசிமக தேரோட்டம் நேற்று, விமர்சையாக நடந்தது. கோவில் முன், அலங்கரித்து நிறுத்தியிருந்த விநாயகர், தீர்த்தகிரீஸ்வரர், வடிவாம்பிகை ஆகிய, மூன்று தேர்கள் மீது, முத்துக்கொட்டை, பொறி, மிளகு, உப்பு மற்றும் நவதானியங்களை துாவி, பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மதியம், 2:15 மணிக்கு, பக்தர்கள் முதலாவதாக அலங்கரிக்கப்பட்ட விநாயகர் தேரை வடம் பிடித்தனர். தொடர்ந்து, விநாயகர் தேர் நிலையை அடைந்ததும், தீர்த்தகிரீஸ்வரர் தேர் புறப்பாடு நடந்தது. அதற்கடுத்து, வடிவாம்பிகை தேரை பக்தர்கள் வடம் பிடித்தனர். விழாவில், அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார், தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரமோகன், நிர்வாகிகள் தென்னரசு, கிருஷ்ணமூர்த்தி மற்றும் சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.
விழாவையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, அரூர் கிளை சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்ட விழாவிற்கு வந்த பக்தர்கள் கூட்டத்தால், அரூர் - தீர்த்தமலை சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விழாவில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், பக்தர்களுக்கு அரூரை சேர்ந்த இஸ்லாமியர்கள் தண்ணீர் பாட்டில்களை வழங்கினர்.