மக்கள் தொடர்பு திட்ட முகாம் 84 பேருக்கு நலத்திட்ட உதவி
மக்கள் தொடர்பு திட்ட முகாம் 84 பேருக்கு நலத்திட்ட உதவி
ADDED : நவ 12, 2026 01:54 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, பட்ரஹள்ளியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து, 84 பேருக்கு, 6.37 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:மாவட்டத்தில் வெற்றி வீடு வழங்கும் திட்டத்தில், வழங்கப்படும் நிதி உதவி, 3 லட்சம் ரூபாயிலிருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 1,700 வீடுகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, வெற்றி ஆடு வழங்கும் திட்டத்தில், தகுதியான பயனாளிகளுக்கு, 5 ஆடுகள் வரை வழங்கும் திட்டத்திற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், தற்போது குடும்பத்திற்கு, 5 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதிய காப்பீட்டு நிறுவன தேர்வு முடிவடைந்ததும், வரும் ஜன., முதல் இந்த சிகிச்சை வரம்பு, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. இதற்கு ரேஷன் அட்டை மற்றும் வருமான சான்றிதழ் சமர்ப்பித்து, இதுவரை அட்டை பெறாதவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை ஆகிய துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும், திட்டங்களின் செயல்விளக்க கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபிநயா, மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
