/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் துவங்காத மேம்பால சீரமைப்பு பணி கண்டுகொள்ளாத தேசிய நெடுஞ்சாலை துறை
/
ஓசூரில் துவங்காத மேம்பால சீரமைப்பு பணி கண்டுகொள்ளாத தேசிய நெடுஞ்சாலை துறை
ஓசூரில் துவங்காத மேம்பால சீரமைப்பு பணி கண்டுகொள்ளாத தேசிய நெடுஞ்சாலை துறை
ஓசூரில் துவங்காத மேம்பால சீரமைப்பு பணி கண்டுகொள்ளாத தேசிய நெடுஞ்சாலை துறை
ADDED : ஜூன் 29, 2025 01:14 AM
ஓசூர், ஓசூரில், மேம்பாலம் சீரமைப்பு பணி துவங்காததால், போலீசார் பெரிதும் சிரமப்படும் நிலையில், பெங்களூரு செல்லும் கனரக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரேயுள்ள உயர்மட்ட பாலத்தில், பேரிங் பழுதாகி கடந்த, 21ம் தேதி முக்கால் அடி அளவிற்கு விலகியது. அதனால் அவ்வழியாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாலத்தின் உறுதி தன்மையை சோதனை செய்த பின், பாலத்தின் அடியில் மரக்கட்டைகள் வைக்கப்பட்டு கடந்த, 23ம் தேதி முதல், கார் போன்ற இலகுரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
தர்மபுரி, சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெங்களூரு செல்லும் கனரக வாகனங்கள், பாலக்கோடு, ராயக்கோட்டை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. சென்னை, வேலுார், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலையில் இருந்து, பெங்களூரு செல்லும் கனரக வாகனங்கள், சூளகிரி அருகே தடுக்கப்பட்டு, உத்தனப்பள்ளி சாலையிலும், ஓசூர் அருகே பேரண்டப்பள்ளியில் தடுக்கப்பட்டு, தொரப்பள்ளி அக்ரஹாரம் வழியாகவும், ஓசூர் சீத்தாராம்மேட்டில் தடுக்கப்பட்டு, இன்னர் ரிங்ரோட்டிலும் திருப்பி விடப்பட்டுள்ளன.
பாலக்கோடு, ராயக்கோட்டை வழியாக வரும் வாகனங்கள், உத்தனப்பள்ளி சாலையில் வரும் வாகனங்கள், ஒன்னல்வாடி வழியாக வரும் வாகனங்கள், சீத்தாராம்மேட்டில் இருந்து வரும் வாகனங்கள், ஓசூரில் சந்தித்து, இ.எஸ்.ஐ., இன்னர் ரிங்ரோட்டில் செல்வதால், அச்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, ரிங்ரோட்டிலுள்ள அசோக் பில்லரிலிருந்து, தளி சாலை ரயில்வே கேட் வரை, 3 கி.மீ., துாரத்திற்கு மேல், தினமும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
அதேபோல், ஓசூர் பஸ் ஸ்டாண்ட், ராயக்கோட்டை சாலை சந்திப்பிலுள்ள சர்வீஸ் சாலைகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார், சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். பாலம் வேலை துவங்கினால், அவ்வழியாக செல்லும் இலகுரக வாகனங்கள் போக்குவரத்தை மாற்றியமைக்க வேண்டும். அதனால், பாலத்தின் மறுமார்க்கத்தில், கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ஒரு பாதையில், இலகுரக வாகனங்களை திருப்பி விட தேவையான ஏற்பாடுகளை, போலீசார் செய்துள்ளனர்.
ஆனால், மேம்பாலம் பழுதாகி, 8 நாளாகியும், பேரிங்குகளை மாற்றி சீரமைப்பு பணி மேற்கொள்ளாமல், தேசிய நெடுஞ்சாலைத்துறை மெத்தனமாக உள்ளது. ஏற்கனவே, மேம்பாலம் சீரமைப்பு பணிக்கு, ஒரு மாதமாகும் என கூறிய நிலையில், இன்னும் பணியை துவங்காமல் உள்ளதால், மேலும் சில மாதங்கள் தாமதமாகும் நிலை உருவாகி உள்ளது. பெங்களூரு செல்லும் வாகன ஓட்டிகள், சுற்றிச்செல்ல வேண்டி உள்ளதால், கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலைத்துறையினரின் அலட்சியம், அவர்களை மேலும் அவதிக்குள்ளாக்கியுள்ளது.