ADDED : ஜன 08, 2024 11:01 AM
அரூரில் மழை குறைவு
அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடந்த, 2020 முதல், 2022 வரை தொடர்ந்து, 3 ஆண்டுகளாக நல்ல மழை பெய்தது. இதனால், வரட்டாறு தடுப்பணை மற்றும் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியதுடன், கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில், நடப்பாண்டு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை போதியளவில் பெய்யாததால், வரட்டாறு தடுப்பணை மற்றும் ஏரி, குளங்கள் நிரம்பவில்லை. இதனால், வறட்சி ஏற்படும் என்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
2 பைக்குகள் திருட்டு
பாலக்கோடு அடுத்த கல்கூடப்பட்டியை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம், 49; பாலக்கோட்டில் துணிக்கடை மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த, 2ம் தேதியன்று அவருடைய ஹோண்டா டியோ ஸ்கூட்டரை கல்கூடப்பட்டியில் உள்ள தன் வீட்டின் முன் நிறுத்திவிட்டு சென்றார். மீண்டும் வந்து பார்த்தபோது வண்டியை காணவில்லை. புகார் படி பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல், காரிமங்கலம் அடுத்த சீகலஹள்ளியில் இ-சேவை மையம் நடத்தி வருபவர் வேடியப்பன், 29; கடந்த, 3ம் தேதியன்று அவருடைய கே.டி.எம்., 200 டியுக் பைக்கை வீட்டின் முன் நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் பார்த்தபோது வாகனத்தை காணவில்லை. அவர் புகார் படி காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இளம்பெண் மாயம்
தர்மபுரி மாவட்டம், பழைய இண்டூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 19 வயது மகள், காரிமங்கலத்திலுள்ள அரசு மகளிர் கல்லுாரியில், 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 6ம் தேதியன்று கல்லுாரியில் சிறப்பு வகுப்பு இருப்பதாக கூறிவிட்டுச் சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இது குறித்து, பெற்றோர் அளித்த புகார் படி, இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
அரசு பஸ் சக்கரத்தில் சிக்கிசைக்கிள் மெக்கானிக் பலி
ஒகேனக்கல்லுக்கு, உறவினருக்கு திதி கொடுக்க வந்த சைக்கிள் மெக்கானிக், அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
தர்மபுரி மாவட்டம், முக்கல்நாய்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன், 53; சைக்கிள் மெக்கானிக். இவர், நேற்று, தன் உறவினர் இறப்பிற்கு திதி கொடுக்க, ஒகேனக்கல்லுக்கு வந்துள்ளார். திதி கொடுத்த பின், காலை, 11:00 மணிக்கு சொந்த ஊர் செல்ல ஓடும் பஸ்ஸில் ஏற முயன்றுள்ளார். அப்போது, நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அதில் பஸ்ஸின் பின்சக்கரம் அவர் மீது ஏறியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து, ஒகேனக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பைக் திருடிய இருவர் கைதுதர்மபுரி நகர பகுதிகளான பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்படும் பைக்குகள் திருட்டு போவது அதிகரித்தது. இது குறித்து, தர்மபுரி டவுன் போலீசார், அப்பகுதிகளில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன்படி, பைக்குகளை திருடிய செந்தில், 35 மற்றும் முத்துக்குமரன், 28 ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து, 5 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
கட்டட மேஸ்திரி கொலையில்
தலைமறைவானவர் கைது
கெட்டுப்பட்டியில் கட்டட மேஸ்திரி கொலையில் நேற்று ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த எர்ரப்பட்டியை சேர்ந்த கட்டட மேஸ்திரி தேவன், 27; கடந்த டிச., 26-ல் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தொப்பூர் போலீசார், தேவன் சடலத்தை மீட்டு, தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.
இதில், எர்ரப்பட்டி பிரபு, 31, பாலாஜி, 19, விஜி, 24, ரஞ்சித், 23, அனுமந்தபுரம் சுபாஷ், 24, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆதி, 19, பச்சியப்பன், 31, கோவிந்தசாமி, 29 ஆகிய, 8 பேரை கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். இதில், தொடர்புடைய கணேசன், 21 என்பவர், கிருஷ்ணகிரி நடுவர்
நீதிமன்றத்தில் சரணடைந்தார். கொலையில் தேடப்பட்டு வந்த, தாதநாயக்கன்பட்டியை சேர்ந்த சஞ்சீவன், 23, தொப்பூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
'கார்ப்பரேட் நிறுவனங்கள் தேவை'
தர்மபுரி மாவட்ட கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டமைப்பு, தமிழக கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்கம், கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு, இணைந்து நடத்திய பொதுக்குழு கூட்டம், நேற்று தர்மபுரியில் நடந்தது.
இதில் கலந்து கொண்ட, தமிழ்நாடு அரசு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
ரியல் எஸ்டேட் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வருவதை நாங்கள் வரவேற்கிறோம். அதனால், தொழில்கள் தொடங்கப்பட்டு வேலைவாய்ப்பு பெருகும். பணப்புழக்கம் அதிகரிக்கும், ரியல் எஸ்டேட் தொழில் வளரும், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். கட்டுமானத்துறை மீண்டும் புதுப்பிக்கபட்டு, வேலை வாய்ப்பு பெருகுவதற்கான, வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்தந்த மாநிலங்களில் செயல்படும் நலவாரியங்களை, மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில், தமிழ்நாட்டில் மட்டும், 18 நலவாரியங்கள் உள்ளன. அதில், கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில், 5,000 கோடி ரூபாய் நிதி உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
3,000 பேருக்கு தே.மு.தி.க., உணவு வழங்கல்
விஜயகாந்த் சினிமா நடிகராக இருந்தபோது, ஒகேனக்கல்லில் வைதேகி காத்திருந்தாள், கரிமேட்டு கருவாயன், சிறையில் பூத்த சின்ன மலர், செந்துாரப்பூவே, பெரிய மருது உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இவரின் நினைவாக ஒகேனக்கல்லில், தனியார் விடுதி வளாகத்தில், சிலை வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அவரின், 11வது நாள் காரியம் நேற்று நடந்தது. இதில், தே.மு.தி.க.,வினர், 300க்கும் மேற்பட்டோர் மொட்டையடித்தும், 3,000 பேருக்கு உணவும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, தே.மு.தி.க., மாநில அவைத்தலைவர் இளங்கோவன், தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் விஜய்சங்கர், மாவட்ட அவைத்தலைவர்
உதயகுமார், கவுன்சிலர் குமார்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
'ஜல்லிக்கட்டுக்கு அனுமதி
அளித்தவர் பிரதமர் மோடி'
''ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்தவர் பிரதமர் மோடி,'' என, தர்மபுரியில் ஓ.பி.எஸ்., பேசினார்.
தர்மபுரியில், தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மற்றும் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., பேசியதாவது: எம்.ஜி.ஆர்., - அ.தி.மு.க.,வை துவக்கியபோது பொதுச்செயலாளர் பொறுப்பை தொண்டர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என விதி வகுத்தார். எம்.ஜி.ஆர்., இறந்தபோது, 16 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். ஜெயலலிதா பொறுப்பேற்ற பின், ஒன்றரை கோடி தொண்டர்களை கட்சிக்குள் கொண்டு வந்தார். ஒற்றை தலைமை எனக்கூறி ஏதேதோ நடந்து விட்டது. வருகின்ற லோக்சபா தேர்தலில், மத்திய, மாநில கட்சிகளுடன் இணைந்து, தேர்தலை சந்திக்க உள்ளோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கூட்டத்தில் வெள்ளமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இழப்பீடு பெற்று தருவதாக
பெண்ணிடம் பணம் பறிப்பு
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மாரியம்பட்டியை சேர்ந்தவர் ஜீவிதா. கூலித்தொழிலாளி. இவரது தாய் காட்டுராணி கடந்த நவ., 28ல் பாம்பு கடித்து இறந்தார். இதையடுத்து கடந்த, 30ல் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தான், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வருவதாகவும், தாய் காட்டுராணி இறப்பதற்கு இழப்பீடு பெற்று தருவதாகவும் கூறி, ஆவணங்களை பெற்று கொண்டு, அதற்கு ஜி.எஸ்.டி., வரி கட்டினால்தான் இழப்பீடு, 3.50 லட்சம் ரூபாய் கிடைக்கும் எனக்கூறி உள்ளார்.
இதை நம்பிய ஜீவிதா, 12,500 ரூபாய் கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட அந்த நபர், தான் கலெக்டர் அலுவலக முதல்மாடியில், 'அ' பிரிவில் பணியாற்றுவதாகவும், தன் பெயர் சிவசங்கரன் எனக்கூறி விட்டு சென்றார். பின், இழப்பீடு குறித்து தகவல் ஏதும் வராததால், ஜீவிதா தர்மபுரி கலெக்டர் அலுவலகம் சென்று விசாரித்ததில், அவ்வாறு யாரும் இல்லை என, தெரியவந்தது. இது குறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
அரசு பள்ளியில் கண் சிகிச்சை முகாம்
அரூர் அடுத்த சித்தேரி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில், கண் பார்வையற்றோர் தினத்தை முன்னிட்டு, கண்ணொளி காப்போம் திட்டத்தில், கண் பரிசோதனை முகாம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் செல்வம் தலைமை வகித்தார்.
சித்தேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்
அரவிந்தன், தீர்த்தமலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ உதவியாளர் கலையரசன் ஆகியோர், 233 மாணவ, மாணவியருக்கு கண் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம்
தை பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசு தொகுப்புகளை பெறுவதற்கான டோக்கன் வினியோக பணிகளை, நல்லம்பள்ளி தாலுகா, ஏ.ஜெட்டிஹள்ளி பஞ்., ஏர்ரப்பட்டியில், தர்மபுரி கலெக்டர் சாந்தி நேற்று தொடங்கி வைத்தார்.
இது குறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணையின்படி, தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாடும் விதமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, 4,67,345 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், 727 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன், ஒரு முழு கரும்பு மற்றும் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில், பொங்கல் பரிசை மேற்கண்ட தகுதியுடைய பயனாளிகள் தங்கள் ரேஷன் கடைகளில், பொருள் வாங்கும் கடைகளில் பெறலாம். பொங்கல் பரிசு தொகுப்பு, ஜன., 10 முதல் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, 14 வரை சுழற்சி முறையில் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் பணி தொடர்பாக வரும், ஜன., 12 வெள்ளிக்கிழமை அன்று அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
விஜயகாந்த் 11வது நாள் சடங்கு
மொட்டை அடித்த தொண்டர்கள்
தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்த் கடந்த, 28 ல் உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது, 11வது நாள் இறுதி சடங்கு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி கூட்ரோட்டில், மாநகர மாவட்ட, தே.மு.தி.க., சார்பில் நேற்று நடந்தது. மாநகர மாவட்ட செயலாளர் ராமசாமிரெட்டி தலைமை வகித்தார். விஜயகாந்த் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. படையல் போட்டு, 11வது நாள் இறுதி சடங்கு செய்யப்பட்டது. மாநகர மாவட்ட துணை செயலாளர் வெங்கடேஷ், மத்திகிரி கிளை நிர்வாகி எல்லப்பா, தொண்டரணி மாவட்ட துணை செயலாளர் முனியப்பா ஆகிய, 3 பேர் மொட்டை அடித்து கொண்டனர். சிலர் விஜயகாந்த் உருவத்தை, பச்சை குத்திக் கொண்டனர்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் மணி, மாவட்ட துணை செயலாளர்கள் ராஜசேகர், வடிவேல், பொருளாளர் அறிவழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ரூ.87.40 லட்சம் திட்டப்பணி துவக்கம்
கிருஷ்ணகிரி அருகே உள்ள வெங்கடாபுரம் பஞ்., அதியமான் நகர், கணபதி நகர் மற்றும் குல் நகரில், 15வது நிதிக்குழு மானியம், கனிமங்களும் குவாரிகளும் நிதியில் இருந்து, 87.40 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்சாலை, சிமென்ட் சாலை, ஜல்லி சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கான பணிகளை, பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இதில், கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி மூர்த்தி, அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னசந்திரம்
பஞ்., தலைவரின்
'செக் பவர்' பறிப்பு
சென்னசந்திரம் பஞ்., தலைவர், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்தும், பஞ்., செயலாளரை தற்காலிக பணி நீக்கம் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளி அருகே உள்ள சென்னசந்திரம் பஞ்., தலைவர் சக்கரவர்த்தி, 55, மற்றும் பஞ்., செயலாளர் மணிகண்டன், 35; இந்த பஞ்சாயத்தில், உயரதிகாரிகளின் அனுமதி பெறாமல் காசோலைகளை தவறாக பயன்படுத்துவதாகவும், 15.92 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது.
இதுகுறித்து, பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் மகாதேவன் மேற்கொண்ட விசாரணையில், புகார் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பஞ்., தலைவர் சக்கரவர்த்தியின், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்தும், பஞ்., தலைவரின் முறைகேடான நடவடிக்கைக்கு உறுதுணையாக இருந்ததாக, பஞ்., செயலாளர் மணிகண்டனை தற்காலிகமாக பணிநீக்கம் செய்தும் அவர் உத்தரவிட்டார்.
உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரியில், ஓ.பி.எஸ்., அணி சார்பில், தொண்டர்களின் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முனியப்பன் வரவேற்றார். கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், கிருஷ்ணன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், மனோஜ்பாண்டியன், மருது அழகுராஜ், கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., பேசினார். ஒன்றிய செயலாளர் சின்னசாமி நன்றி கூறினார். இதில், 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ரூ.16 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகள் துவக்கம்
கிருஷ்ணகிரி ஒன்றியம், சின்னபெல்லாரம்பள்ளி கிராமத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்நோக்கு கட்டடம் கட்டப்படுகிறது.
இதேபோல், கிருஷ்ணகிரி ஒன்றியம் மல்லிநாயனப்பள்ளி பஞ்.,
கள்ளியூர் கிராமத்தில்,
எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், வயலுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் ஓரம் தடுப்புச்சுவரும், வயலுக்கு நடந்து செல்ல வாய்க்கால் மீது கல்வெட்டும் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார், பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
அப்போது, சின்னபெல்லாரம்பள்ளி கிராம மக்கள், சாக்கடை கால்வாய் மற்றும் சிமென்ட் சாலை அமைத்துத்தர வேண்டும் என்றும், கடந்த, 5 ஆண்டுகளாக கிராமத்திற்கு வராமல் நிறுத்தி வைத்துள்ள, 40ம் நம்பர் டவுன் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்றும் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர்.
இதில், ஒன்றிய செயலாளர்கள் கன்னியப்பன், சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, பஞ்., கவுன்சிலர் சங்கீதா சரவணன், வார்டு உறுப்பினர் சக்தி, பஞ்., துணைத்தலைவர் லட்சுமி, பா.ஜ., மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
பொறியியல் பணிக்கு
எழுத்து தேர்வு
கிருஷ்ணகிரியில், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்துத்தேர்வை, 1,017 பேர் எழுதினர்.
கிருஷ்ணகிரியில், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்துத்தேர்வு நேற்று வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் நடந்தன. இத்தேர்வு மையங்களை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் சரயு, நிருபர்களிடம் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஒருங்கிணைந்த பொறியியல் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 3 தேர்வு மையங்களில் நடந்தன. இதை, 1,017 பேர் எழுதினர். தேர்வுகளை கண்காணிக்க, 3 முதன்மை கண்காணிப்பாளர்களும், 2 நடமாடும் அலகுகள், 3 வீடியோகிராபர்கள், 2 ஆயுதம் ஏந்திய போலீசார், 3 தேர்வுக்கூட போலீசார் என மொத்தம்,
13 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும், தேர்வர்களுக்கு போக்குவரத்து வசதி, மின் வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி மற்றும் போலீஸ் பாதுகாப்பு
ஏற்பாடுகள் என அனைத்து வசதிகளும் மற்றும் சிறப்பு நடமாடும் மருத்துவக் குழுவும் தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வில், தாசில்தார் விஜயகுமார், பாரத்
இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி முதன்மைக் கண் காணிப்பாளர் நஞ்சகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
பொங்கல் பரிசு தொகுப்பு
டோக்கன் வழங்கும் பணி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நுகர்பொருள் வாணிப கழகத்தால் நடத்தப்படும், 34 முழுநேர ரேஷன் கடைகள், 2 பகுதிநேர ரேஷன் கடைகள், கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும், 524 முழுநேர ரேஷன் கடைகள், 505 பகுதிநேர ரேஷன் கடைகள், சுய உதவிக்குழுக்களால் நடத்தப்படும், 30 முழுநேர ரேஷன் கடைகள் என மொத்தம், 1,094 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக, தமிழக அரசு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் 1,000 ரூபாய் ரொக்கம்
உள்ளிட்டவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு, டோக்கன் வழங்கும் பணி நேற்று துவங்கியது. அதன்படி, கிருஷ்ணகிரி லட்சுமணராவ் தெருவிலுள்ள ரேஷன் கடையில், டோக்கன்களை வழங்கும் பணியை மாவட்ட கலெக்டர் சரயு ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து அலுவலர்கள் கூறுகையில், 'மாவட்டத்தில், 5,62,894 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதில், பொங்கல் பரிசு தொகுப்பு பெற தகுதி வாய்ந்த, 4,85,004 ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணிகள் துவங்கியுள்ளது' என்றனர்.