sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : ஜன 15, 2024 11:19 AM

Google News

ADDED : ஜன 15, 2024 11:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாய்மை பணியாளர்களுக்கு

பொங்கல் புத்தாடை வழங்கல்

அரூர் டவுன் பஞ்.,ல், பணிபுரியும், 50க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்களுக்கு பொங்கலை முன்னிட்டு, டவுன் பஞ்., தலைவர் இந்திராணி புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கினார். இதில், துப்புரவு ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

அரூரில் காய்கறி விலை உயர்வு

அரூரில், பொங்கல் பண்டிகையையொட்டி, நேற்று காய்கறிகளின் விலை கிலோவிற்கு, 5 முதல், 15 ரூபாய் வரை அதிகரித்து, ஒரு கிலோ தக்காளி, 25 ரூபாய்க்கும், வீட்டு அவரை, 100, கத்திரி, 30, வெண்டை, முள்ளங்கி தலா, 40, மொச்சை அவரை, 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடு

அரூர் கடைவீதி மற்றும் மஜீத்தெருவில், வணிக நிறுவனங்கள், ஜவுளி மற்றும் நகை கடைகள் உள்ளன. இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு புத்தாடை, பூஜை பொருட்கள் போன்றவற்றை வாங்க, கடந்த சில நாட்களாக மக்கள் அதிகளவில் வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில், கடை

வீதியில் இருந்து, மாரியம்மன் கோவில் தெரு வரை, சாலையின் நடுவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 4 சக்கர வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் திருட்டு, நகை பறிப்பு போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தி.மு.க., அலுவலகத்தில்

சமத்துவ பொங்கல் விழா

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில் நேற்று காலை சமத்துவ பொங்கல் விழா நடந்தது. மாவட்ட செயலாளரும், பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான மதியழகன் தலைமை வகித்தார். விழாவில், கோவில் பூசாரி, கிறிஸ்தவர், இஸ்லாமியர் மற்றும் எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் புதுப்பானையில் அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை ஆகியவற்றை தங்கள் கைகளால் போட்டு, பொங்கல் விழாவை துவக்கி வைத்தனர்.

பின்னர் அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டன. மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், நகர செயலாளர் நவாப், மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கதிரவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

பொங்கல் கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சார்பில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி, காந்தி சாலையிலுள்ள அரசு மருத்துவமனையில் அமைந்துள்ள, 108 ஆம்புலன்ஸ் அலுவலக வளாகத்தில், மாவட்ட மேலாளர் ரஞ்சித் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதி தலைமையில், ஆம்புலன்சில் பணிபுரியும் இ.எம்.டி., மற்றும் பைலட்கள் இணைந்து, சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். இதில், தன்னுடன் பணிபுரியும் ஊழியர்களோடு இணைந்து, பொங்கல் வைத்து கொண்டாடினர்.

தர்மபுரி மாவட்ட போலீசார்

பொங்கல் கொண்டாட்டம்

தர்மபுரி மாவட்ட போலீசார் வெண்ணாம்பட்டி ஆயுதப்படை வளாகத்திலும், போக்குவரத்து போலீசார் ஜங்ஷன் பகுதியிலும் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

தர்மபுரி மாவட்ட போலீசார் வெண்ணாம்பட்டி உள்ள ஆயுதப்படை வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழாவை நடத்தினர். இதில், போலீசார் குடியிருப்பில் உள்ள குழந்தைகளுக்கு கயிறு இழுக்கும் போட்டி, இசை நாற்காலி போட்டி, உறியடித்தல் போட்டி, லெமன் த ஸ்பூன், கைப்பந்து போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு தர்மபுரி மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் பரிசு வழங்கினார்.

இதில் ஏ.டி.எஸ்.பி., இளங்கோவன், பாலசுப்பிரமணியன், டி.எஸ்.பி., சத்தியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் செல்வமணி, வெங்கடாசலம், அன்பழகன், எஸ்.ஐ., பாரூக், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல், தர்மபுரி நகர போக்குவரத்து போலீசார் சார்பில், ஜங்சனில் எஸ்.ஐ.,க்கள் சதீஸ்குமார், சின்னசாமி தலைமையில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. இதில், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்றம்

அரூர் கொங்கு வேளாள கவுண்டர்கள் திருமண மண்டபத்தில், கொங்கு ஒயிலாட்டக்குழு, ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி குழுவினரின் வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு துவங்கியது.

முதல் நிகழ்வாக, முளைப்பாரி - கும்மியை தொடர்ந்து, பரதநாட்டியம், வேப்பிலை பாடல், சேவர் கொடி பாடல், கரகாட்டம், ஒயிலாட்டம், பெருஞ்சலங்கை ஆட்டம், கோலாட்டம், வள்ளி - கும்மி நடந்தது. இதில், சிறுமியர், பெண்கள் மற்றும் ஆண்கள் என, 200க்கும் மேற்பட்டோர் வள்ளி கும்மி ஆடினர்.

முன்னதாக, மதியம், 3:00 மணிக்கு அரூர், 4 ரோட்டிலுள்ள மாரியம்மன் கோவிலில் துவங்கிய ஊர்வலத்தில் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலத்தில், குதிரையின் மீது, தீரன் சின்னமலை வேடத்துடன் மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், முருகன் வேடமணிந்து, மேளதாளத்துடன் கொங்கு வேளாள கவுண்டர்கள் மண்டபத்தில் ஊர்வலம் நிறைவடைந்தது.

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து உயர்வு

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு, 548 கன அடியாக நீர்வரத்து இருந்தது.

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த மாதம், 10ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, 35 நாட்களாக வினாடிக்கு, 448 கன அடியாக நீர்வரத்து இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு, 100 கன அடி அதிகரித்து, 548 கன அடியாக உயர்ந்தது. அணையின், 7 ஷட்டர்களும் புதிதாக மாற்றும் பணி நடந்து வருவதால், அணைக்கு வரும், 548 கன அடி நீரும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால், நீரில் ரசாயன நுரை பெருக்கெடுத்து, ஆற்றில் கடும் துர்நாற்றத்துடன் தண்ணீர் ஓடியது. நேற்று காலை நிலவரப்படி, அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 24.33 அடிக்கு நீர் இருப்பு இருந்தது.

இருவேறு விபத்தில் 2 பேர் பலி

பர்கூர் தாலுகா மருதேப்பள்ளியை சேர்ந்தவர் செல்வராஜ்; இவரது மகன் ராஜேஷ், 18; இவரும், கிடப்பநாயனப்பள்ளியை சேர்ந்த அஸ்வின்குமார், 21, என்பவரும் கடந்த, 12 ல் இரவு, 7:30 மணிக்கு, பஜாஜ் பல்சர் டூவீலரில், சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், சுண்டம்பட்டி ஜங்ஷன் அருகே சென்றனர். அவ்வழியாக சென்ற கார் மோதியதில் படுகாயம் அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். அஸ்வின்குமார் படுகாயத்துடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர். பர்கூர் தாலுகா பண்டசீமனுாரை சேர்ந்தவர் மணி, 55; இவர் கடந்த, 13ல் மாலை, 6:30 மணிக்கு கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் கணபதி நகர் பகுதியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக சென்ற கார் மோதியதில் மணி சம்பவ இடத்திலேயே பலியானார். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தர்மபுரியில் பைக் திருட்டு

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த கெட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 23; இவர் தனியார் கோச்சிங் சென்டரில் படித்து வருகிறார். இந்நிலையில், வழக்கு விசாரணை தொடர்பாக கடந்த, 4ம் தேதியன்று தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகேயுள்ள ஆவின் பாலகத்தில் அவருடைய பஜாஜ் டிஸ்கவர் பைக்கை நிறுத்திவிட்டு நீதிமன்றத்திற்கு சென்றார். பின்னர், மீண்டும் வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

வீட்டிலிருந்து மாயமானமூதாட்டி சடலமாக மீட்பு

குட்டூர் கோம்பையில் வீட்டிலிருந்து மாயமான மூதாட்டி, சடலமாக மீட்கப்பட்டார்.

நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதுார் கோம்பையை சேர்ந்தவர் சின்னகொளந்தை, 85; கடந்த, 5-ம் தேதியன்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வரவில்லை. உறவினர்கள், பல இடங்களில் தேடியும் கிடைக்காதததால், அவருடைய மகன் முருகன், போலீசில் புகார் அளித்தார். அதன் படி தொப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து, மாயமானவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று, குட்டூர் கோம்பை பகுதி பாறை இடுக்கில், மூதாட்டி சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடம் சென்ற தொப்பூர் போலீசார்,

சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

மகனுடன் தாய் தற்கொலைதர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த தொட்டம்பட்டி தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் இருந்த மரத்தில் கடந்த, 12ம் தேதி, 40 வயது மதிக்கத்தக்க பெண் துாக்கிட்டு இறந்த நிலையில் கிடந்தார். அதே போல், ஆற்றில், 19 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்த நிலையில் கிடந்தார். மொரப்பூர் போலீசார் இரண்டு சடலங்களையும் மீட்டு, விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அவர்கள் இருவரும், ஒடசல்பட்டியை சேர்ந்த செல்வி, 40, மற்றும் அவரது இளைய மகன் யோகராஜ், 19, என்பதும், செல்வியின் கணவர் காவேரி, 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், மூத்த மகன் சிவகிரி, 20, என்பவரும், கடந்த, 6 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால், மன உளைச்சலில் இருந்த தாய் செல்வி, மாற்றுத்திறனாளியான தன் இளைய மகன் யோகராஜியுடன், தற்கொலை செய்தது தெரிய வந்தது.

தேவாலயத்தில் பொங்கல்பண்டிகை கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முனீஸ்வர் நகர் அருகே டிவைன் நகரில், குழந்தை இயேசுவின் புனித தெரசாள் தேவாலயம் உள்ளது. இங்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆரோக்கியமாதா, குழந்தை தெரசா, அந்தோணியார் உட்பட மொத்தம், 12 அன்பியங்கள் சார்பில், சமத்துவ பொங்கல் விழா நேற்று காலை கொண்டாடப்பட்டது. தேவாலய பங்குதந்தை அற்புதராஜ் தலைமையில், 12 அன்பியங்களும் தனித்தனியாக பொங்கலிட்டு, கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு அன்பியங்களும், தனித்தனியாக கோலங்களை போட்டிருந்தனர். நுாற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

லாரி கவிழ்ந்து விபத்து

நல்லம்பள்ளி அடுத்த எர்ரப்பட்டியை சேர்ந்தவர் முனுசாமி, 40, டிரைவர்; கேரளாவில் இருந்து போச்சம்பள்ளிக்கு, மாட்டு தீவன மூட்டைகள் லோடு ஏற்றிக்கொண்டு வந்தார்.

நேற்று அதிகாலை, கெங்கலாபுரம் பகுதி, தேசிய நெடுஞ்சாலை அருகே வந்தபோது, கட்டுப்பாட்டையிழந்த லாரி, பாலம் அருகே, சாலை நடுவே கவிழ்ந்தது. இதில் ஓட்டுனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். சர்வீஸ் சாலையில் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து, சாலை பராமரிப்பு குழுவினர் மற்றும் தொப்பூர் போலீசார் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர்செய்தனர். விபத்து குறித்து, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

இன்ஸ்பெக்டர்

பொறுப்பேற்பு

சூளகிரி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ரஜினி; இவர், சேலம் மாவட்டம், சங்ககிரி ஸ்டேஷனுக்கு சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் தேவி, சூளகிரி இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று சூளகிரி ஸ்டேஷனில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

போகிசந்தையில் விற்பனை அமோகம்

கடத்துாரில் நேற்று நடந்த போகிசந்தையில், பொங்கல் வைக்க தேவையான மண்பானைகள், கால்நடைகளுக்கு கட்டப்படும் பல்வேறு வகையான வண்ண கயிறுகள், கோல மாவுகள் மற்றும் கலர் பொடிகள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை விவசாயிகளும், பொதுமக்களும், அதிகளவில் வாங்கிச் சென்றனர்.

மாட்டுப் பொங்கலன்று, மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் பூசி, கழுத்தில் மணிக்கட்டி, மாலை அணிவித்து, அலங்காரம் செய்து, பொங்கல் படையலிட்டு மாடுகளுக்கு வழங்குவர்.

அப்போது, கழுத்து கயிறு மூக்கணாங்கயிறுகள் புதிதாக விவசாயிகள் கட்டுவர். இதற்காக சந்தையில், மாடுகளுக்கு கட்டப்படும் மணிகள், கழுத்து கயிறு, கொம்பு கயிறு, சங்கு கயிறு, உள்ளிட்ட பல வகையான கயிறுகள் தரத்துக்கு ஏற்ப, 10 முதல், 600 ரூபாய் வரை விற்பனையானது. பானைகள், 150 முதல், 400 ரூபாய் விற்பனையானது. பூஜைபொருட்கள், மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை களைகட்டியது.

அரூர் இந்தியன் மெட்ரிக்

பள்ளியில் பொங்கல் விழா

அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் அமைந்துள்ள இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தாளாளர் பழனிவேல் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

இதையடுத்து மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து மாணவ, மாணவியர், ஆசிரியர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுக்கான உறியடித்தல், கயிறு இழுத்தல், முறுக்கு கடித்தல், கைப்பந்து, கோணிப்பை ஓட்டம் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவில் ஐ.எம்.எஸ்., மெட்ரிக் பள்ளி முதல்வர் மணிகண்டன், துணை முதல்வர் சிலம்பரசன், ஐ.பி.எஸ்., பள்ளி முதல்வர் ஸ்ரீலதா, ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், ஓட்டுனர்கள், பணியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பா.ம.க., இளைஞர் சங்க

சமத்துவ பொங்கல் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, ஊணாம்பாளையத்தில், பா.ம.க., இளைஞர் சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. ஊணாம்பாளையம் சிவக்குமார், சிவா, பூவரசன், துரை, பரமசிவன் ஆகியோர் தலைமையில், பா.ம.க., கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகர், சமூக நீதி பேரவை மாநில துணைத்தலைவர் மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடாசலம், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஹரிதாஸ் முன்னிலையில் கட்சி கொடியேற்றி, பொங்கல் வைத்துக் கொண்டாடினர். இதில், ஏராளமான, பா.ம.க.,வினர் கலந்து கொண்டனர்.

ஓசூர் அருகே ரூ.15 கோடி அரசு நிலம் மீட்புஓசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளி கிராமத்திலுள்ள அரசு நிலம், 2.20 ஏக்கர் நிலத்தை, அப்பகுதியைச் சேர்ந்த வீரபத்தரய்யா என்பவர் கடந்த, 15 ஆண்டுகளாக அறக்கட்டளை என்ற பெயரில் பயன்படுத்தி வந்தார். அந்த நிலத்தை மீட்க, மாவட்ட கலெக்டர் சரயு உத்தரவுபடி, ஓசூர் தாசில்தார் சுப்பிரமணியன் முன்னிலையில், வருவாய்த்துறையினர் சென்று அந்த நிலத்தில் கட்டப்பட்டிருந்த குடிசைகளை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் அகற்றி நிலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய மதிப்பு, 15 கோடி ரூபாய் என தாசில்தார் தெரிவித்தார்.

16 கைதிகளுக்கு

பொங்கல் 'பரோல்'

சேலம் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள், அவரவர் குடும்பத்தினரின் துக்கம், விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க, ஆண்டுக்கு, 15 நாட்கள், 'பரோல்' வழங்கப்படுகிறது. அதை அவர்கள் பிரித்து பரோலில் செல்லலாம். அதன்படி பொங்கல் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட, சேலம் மத்திய சிறை கைதிகள், 48 பேர் பரோல் கேட்டு விண்ணப்பித்தனர். இதில், 16 பேருக்கு பரோல் வழங்கப்பட்டதால், நேற்று சிறையில் இருந்து சொந்த ஊர்களுக்கும், உறவினர்களின் வீடுகளுக்கும் புறப்பட்டனர்.

சந்தன கட்டை கடத்திய

பர்கூர் தம்பதி சிக்கினர்

திருப்பத்துார் அருகே, ஆட்டோவில் சந்தன கட்டை கடத்திய, பர்கூர் தம்பதி உள்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்துாரை அடுத்த வெங்களாபுரம் அருகே, திருப்பத்துார் தாலுகா போலீசார், நேற்று முன்தினம் இரவு, வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு ஆட்டோவில் பைகளுடன் மூன்று பேர் வந்தனர். பைகளை சோதனை செய்ததில், 10 கிலோ சந்தன கட்டை இருந்தது. மூவரையும் விசாரித்ததில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த

ஒப்பந்தவாரி காளியப்பன், 55, அவர் மனைவி பாப்பா, 45, அவர்களது உறவினர் மாணிக்கம், 42, என தெரிந்தது.

பெங்களூருவில் இருந்து திருப்பத்துாரில் ஒருவருக்கு விற்பனை செய்ய, கொண்டு சென்றது தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 10 கிலோ சந்தன கட்டையை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us