/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 'ஆரஞ்ச் அலர்ட்' மிதமான மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 'ஆரஞ்ச் அலர்ட்' மிதமான மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 'ஆரஞ்ச் அலர்ட்' மிதமான மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 'ஆரஞ்ச் அலர்ட்' மிதமான மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : அக் 23, 2025 01:17 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 'ஆரஞ்ச் அலர்ட்' விடப்பட்டுள்ளதால், நேற்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் கடந்த, 2 நாட்களாக லேசாக மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரியில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை மழை பெய்தது. வானிலை அறிக்கையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு எந்த அறிவிப்பும் செய்யாததால், பள்ளி, கல்லுாரிகள் வழக்கம் போல் இயங்கின.
பகல், 12:00 மணிக்கு, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' விடப்பட்டது. தொடர்ந்து பிற்பகல், 3:00 மணி முதல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. தொடர் மழையால் விவசாய நிலங்கள் மற்றும் பள்ளமான சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக, ஊத்தங்கரை மற்றும் பாம்பாறு அணையில் தலா, 34 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதே போல், பாரூர், போச்சம்பள்ளியில் தலா, 24, பெனுகொண்டாபுரம், 23.20, நெடுங்கல், 16.20, கெலவரப்பள்ளி அணை, 15, கே.ஆர்.பி., அணை, 12, கிருஷ்ணகிரி, 10, ராயக்கோட்டை, 7, சூளகிரி, தேன்கனிக்கோட்டை தலா, 6, சின்னாறு அணை, 5, ஓசூர், 4 என மொத்தம், 220.80 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.
தொடர் சாரல் மழை
ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல், மாலை வரை விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது.
சில இடங்களில் மிதமான மழை பதிவானது. தொடர்ந்து மழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குளிரின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது.
ஓசூர், கெலவரப்பள்ளி அணை பகுதியில் நேற்று முன்தினம் மழை பெய்த நிலையில், நேற்று காலை நீர்வரத்து, 1,126 கன அடியாக தொடர்ந்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.51 அடிக்கு நீர் இருப்பு இருந்தது.
தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 1,038 கன அடி நீரும், வலது, இடது பாசன கால்வாய்களில், 88 கன அடி நீரும் திறந்து விடப்பட்டது. தென்பெண்ணை ஆற்றில் நேற்றுடன், 17 வது நாளாக, 1,000 கன அடிக்கு மேல் நீர் சென்றதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்தது.
* போச்சம்பள்ளி, மத்துார் சுற்று வட்டார பகுதிகளான சந்துார், அத்திகானுார், களர்பதி, அகரம், பண்ணந்துார், அரசம்பட்டி, புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல், மேகமூட்டத்துடன் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அன்றாட தேவைகளுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட பகுதிகளில், மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மாணவர்கள் அவதி
நேற்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்காத நிலையில், மழையால், மாலையில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீடு திரும்ப முடியாமல், நீண்ட நேரம் பள்ளி வளாகத்திலேயே காத்திருந்தனர்.
தொடர்ந்து, மாணவர்களின் பெற்றோர் எடுத்து வந்த குடைகளிலும், மழையில் நனைந்தவாறும் மாணவர்கள் வீடு திரும்பினர். நேற்று மாலை பெய்த மழையில், நனைந்தவாறு சென்றதால் மாணவர்கள் கடும் அவதியுற்றனர்.