/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பண்ணந்துாரில் திருவிழாவுக்கு அனுமதி கோரி 200க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்
/
பண்ணந்துாரில் திருவிழாவுக்கு அனுமதி கோரி 200க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்
பண்ணந்துாரில் திருவிழாவுக்கு அனுமதி கோரி 200க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்
பண்ணந்துாரில் திருவிழாவுக்கு அனுமதி கோரி 200க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்
ADDED : மே 29, 2025 01:13 AM
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பண்ணந்துார் கிராமத்தில், 100 ஆண்டு பழமையான திரவுபதியம்மன், தர்மராஜா கோவில் உள்ளது.
இக்கோவிலில் பண்ணந்துார், கொட்டாவூர், வேதகரம், கள்ளிப்பட்டி, மொள்ளம்பட்டி, சாமாண்டப்பட்டி, காராமூரை சேர்ந்தவர்கள் நேற்று திருவிழா நடத்துவதாக நோட்டீஸ் அச்சடித்து ஊர் முழுக்க வினியோகம் செய்திருந்தனர்.
இதற்கு ஒரு தரப்பினர், எங்களையும் சேர்த்து திருவிழா நடத்த கேட்டபோது, 'திரவுபதியம்மன் திருவிழாவை காலம், காலமாக நாங்கள் மட்டும் தனியாக நடத்தி வருகிறோம். பட்டாளம்மன் திருவிழாவை தான் அனைத்து தரப்பினரும் சேர்ந்து செய்வது வழக்கம்' எனக்கூறி, திருவிழாவை நடத்தாமல் இருக்க ஒரு தரப்பினர் முடிவு செய்தனர்.
கடந்த, 26ல் போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில், தாசில்தார் சத்யா முன்னிலையில் இருதரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதில் முடிவு எட்டப்படவில்லை.
நேற்று பண்ணந்துார், கொட்டாவூர் உள்ளிட்ட, 7 கிராமத்தை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று காலை, 8:00 மணி முதல், 11:00 மணி வரை, பண்ணந்துார் நான்கு ரோடு சந்திப்பில், மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், திருவிழாவுக்கு உறவினர்கள் வந்துவிட்டனர், திருவிழாவை நடத்தாமல் நிறுத்தினால் சுவாமி குற்றம் நடக்கும், ஒவ்வொரு திருவிழாவின்போதும், ஒரு தரப்பினர் பிரச்னை செய்வதால், போராட்டம் நடத்த வேண்டி உள்ளது எனக்கூறினர். இதில் ஒரு சில பெண்கள், மண்ணெண்ணெய்யுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
துவங்கிய திருவிழா
ஊர் முக்கியஸ்தர்களிடம், போலீசார் மற்றும் போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா நடத்திய பேச்சுவார்த்தையில், திருவிழா நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் மறியலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்று, திரவுபதியம்மன் கோவில் முன் கொடிமரம் நட்டு, பம்பை, உடுக்கையுடன் பட்டாசு வெடித்து திருவிழாவை கொண்டாட துவங்கினர்.
பாதுகாப்பு பணியில் ஏ.டி.எஸ்.பி., சங்கர், டி.எஸ்.பி.,க்கள் பர்கூர் முத்துகிருஷ்ணன், ஊத்தங்கரை சீனிவாசன், கிருஷ்ணகிரி பழனி மற்றும் 5 இன்ஸ்பெக்டர்கள், 50 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.