ADDED : அக் 30, 2026 02:00 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், தளிஹள்ளி பஞ்.,க்குட்பட்ட பெரிய தளிஹள்ளியில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
பர்கூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராசன் ரேஷன் கடையை திறந்து வைத்து பேசியதாவது: பர்கூர் சட்டசபை தொகுதி மக்களுக்கு நான் தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகள் அளித்தேன். அவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்ற போராடி வருகிறேன். சட்டசபையில் நம் தொகுதிக்கு தேவைப்படும் திட்டங்கள், நிதி குறித்து முதல்வருக்கு நேரடியாக கோரிக்கை விடுத்தேன். அதன்படி இன்று தளிஹள்ளியில் பகுதி நேர ரேஷன்கடை, அங்கன்வாடி மையம், கூடுதல் வகுப்பறை கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.புதிய பல திட்டங்களுக்கும், மலை கிராம மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் குறித்தும் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த திட்டங்களையும் செயல்படுத்த பாடுபடுவேன். அதேபோல தொகுதியில் உள்ள குறைகள் குறித்து, எப்போதும் போல என்னை நேரடியாக தொடர்பு கொண்டு தெரிவித்தால், முடிந்தளவிற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, பேசினார்.
அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கே.பி.எம்., சதீஷ்குமார், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணன், முன்னாள் பஞ்., தலைவர்கள் சுதா பிரேம்குமார், திருவரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
