/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மொபைல்போன் டவரின்றி மலை கிராம மக்கள் அவதி
/
மொபைல்போன் டவரின்றி மலை கிராம மக்கள் அவதி
ADDED : செப் 29, 2025 02:11 AM
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் போதக்காடு ஊராட்சியில் கரியதாதனுார், மாரியம்மன் கோவிலுார்,போதக்காடு, முல்லை நகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 90 சதவீதம் மக்கள் மலைவாழ் மக்கள். இப்பகுதி மக்கள், தங்கள் அத்தியாவசிய தேவைக்காக பாப்பிரெட்டிப்பட்டி பொம்மிடி, பையர்நத்தம் பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இக்காலத்தில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இக்கிராமத்தில் எந்த ஒரு மொபைல்போன் டவரும் அமைக்க முன் வராததால், கிராம மக்கள் மொபைல்போனை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'போதக்காடு பகுதியில், இதுவரை மொபைல்போன் டவர் அமைக்கப்படவில்லை. அனைவரிடமும் மொபைல்போன் உள்ளது. ஆனால் டவர் இல்லை. 3 கி.மீ., தொலைவில் உள்ள பையர்நத்தம் சென்றால் மட்டுமே டவர் கிடைக்கும். வெளியூர்களில் தங்கி படிக்கும், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும், தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். அவசர தேவைக்கு ஆம்புலன்சை கூட தொடர்பு கொள்ள முடியாமல் உள்ளது. போதக்காடு ஊராட்சி மக்கள் அரசின் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளனர். ஆகவே அரசு சார்பிலோ, அல்லது தனியார் மூலமாகவோ மொபைல்போன் டவர் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.