/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மேல்சோமார்பேட்டை அருகே நடைமேம்பாலம் அமைக்க மனு
/
மேல்சோமார்பேட்டை அருகே நடைமேம்பாலம் அமைக்க மனு
ADDED : ஏப் 24, 2025 01:22 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அடுத்த மேல்சோமார்பேட்டை பொதுமக்கள், அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரையிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது: மேல்சோமார்பேட்டை, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளது. அருகிலுள்ள நகரத்திற்கு பொதுமக்கள் வர சுற்றி வரும் நிலை உள்ளது. பஸ் ஸ்டாண்ட், பள்ளி, மற்றும் மயானத்திற்கு டோல்கேட் வரை, 2 கி.மீ., தொலைவு நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
இது பெரும் அசவுகரியத்தை ஏற்படுத்துவதோடு, பள்ளிக் குழந்தைகள், மூத்த குடிமக்கள் ஆகியோர், மின்னல் வேகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கடக்கும் வாகனங்களால் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.
மேல்சோமார்பேட்டை மட்டுமின்றி, அருகிலுள்ள மூன்று கிராம பஞ்., மக்களும் இதே பாதையை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பயண துாரத்தை குறைக்கவும், பொது பாதுகாப்பை உறுதி செய்யவும், மேல்சோமார்பேட்டையிலிருந்து அரசு புறநகர் பஸ் டிப்போ வரை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கில், நடை மேம்பாலம் அமைக்க, ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறியிருந்தனர்.
இதையடுத்து, எம்.பி., தம்பிதுரை அப்பகுதியை பார்வையிட்டு, தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட மேலாளர் ரமேஷ் யாதவ்விடம் பேசிய பின் கூறியதாவது: ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி டோல்கேட் வரை, 5 நடை மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு நடை மேம்பாலம் டோல்கேட் அருகில் அமைக்காமல், மேல்சோமார்பேட்டை அருகே அமைக்கலாம் என, ஒப்புக் கொண்டுள்ளனர். விரைவில் அதற்கான பணிகள் துவங்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

