ADDED : செப் 18, 2025 01:20 AM
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கிழக்கு மண்டல, பா.ஜ., சார்பில், பிரதமர் மோடி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மண்டல தலைவர் மணிகண்டன், முன்னாள் துணைத்தலைவர் சீனிவாசன், முன்னாள் பொதுச்செயலாளர் வெங்கடேசலு தலைமை வகித்தனர். ஓசூர் பெரியார் நகர் வேல்முருகன் கோவிலில், பிரதமர் மோடி நீண்ட ஆயுளோடு வாழ வேண்டி, அவரது பெயரில் சிறப்பு பூஜை செய்யப்பட்டன. முன்னாள் மாவட்ட தலைவர் நாகராஜ், பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கினார்.
மேலும், ஓசூர் தாலுகா அலுவலகத்தில் அவசர கால முதலுதவி பெட்டிகளை வழங்கியதுடன், ஓசூர் பஸ் ஸ்டாண்டிலும் பொதுமக்களுக்கு நாகராஜ் அன்னதானம் வழங்கினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் முருகன், முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர்கள் பிரவீன்குமார், வரலட்சுமி, மாவட்ட துணைத்தலைவர் மஞ்சுளம்மா உட்பட பலர் பங்கேற்றனர்.
* ஊத்தங்கரையில், பா.ஜ., முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் சிவா தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் வரதராஜ், மண்டல முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி., நரசிம்மன், முன்னாள் மாவட்ட தலைவர் தர்மலிங்கம், முன்னாள் மாவட்ட பொதுசெயலாளர் ஜெயராமன் பேசினர். ஊத்தங்கரை ரவுண்டானாவில், 76 கிலோ பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டது. பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் அனைவருக்கும் கேக், புத்தாடைகள் வழங்கப்பட்டது. மேலும், 500 தேக்கு மர கன்றுகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
* கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, பா.ஜ., தலைவர் கவியரசு தலைமையில், சந்துார் அடுத்த, கெங்காவரம் அரசு நடுநிலைப் பள்ளி, 120 மாணவ, மாணவியருக்கு ஸ்டீல் வாட்டர் பாட்டில், பேனா, பென்சில், இனிப்பு வழங்கப்பட்டது. அதேபோல் மத்துார் அடுத்த, அத்திகானுாரில், 75 கிலோ கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.