'ஷிப்ட்' முடிந்து இரவில் சென்ற தனியார் ஊழியருக்கு தொல்லை
'ஷிப்ட்' முடிந்து இரவில் சென்ற தனியார் ஊழியருக்கு தொல்லை
ADDED : நவ 01, 2026 01:28 AM
ஓசூர்: ஓசூரில், தனியார் நிறுவனத்தில், 'ஷிப்ட்' முடிந்து சென்றபோது, பெண்ணின் வாயை பொத்தி தவறாக நடக்க முயன்ற வாலிபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர், 24 வயது இளம்பெண்; டிப்ளமோ படித்துள்ள இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தங்கி, சூளகிரியில் உள்ள தனியார் நிறுவனத்தில், 20 நாட்களாக ஜூனியர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். கடந்த, 28ம் தேதி, 2வது, 'ஷிப்ட்' என்பதால், வேலைக்கு சென்று விட்டு, நிறுவனத்தின் வாகனத்தில், ஓசூர் ஜி.ஆர்.டி., சர்க்கிள் பகுதியில் நள்ளிரவு, 12:15 மணிக்கு வந்து இறங்கினார். அங்கிருந்து, தான் தங்கியுள்ள அறைக்கு நடந்து சென்றார். அப்போது, வெள்ளை நிற ஸ்கூட்டரில், 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் அவ்வழியாக சென்றார்.அவர், இளம்பெண் தனியாக நடந்து செல்வதை கவனித்து, மீண்டும் திரும்பி வந்தது, இளம்பெண்ணிற்கு பின்னால் சிறிது துாரம் ஸ்கூட்டரில் பின் தொடர்ந்தார். சுகுணம் மூர்த்தி மடம் தெருவில், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, இளம்பெண்ணை பிடித்து இழுத்து, வாயை பொத்தி தவறாக நடக்க முயன்றார். இளம்பெண் சத்தம் போட்டதால், வாலிபர் அங்கிருந்து தப்பிச்சென்றார். இது தொடர்பாக நேற்று முன்தினம் அப்பெண் புகார் படி, ஓசூர் அனைத்து மகளிர் போலீசார், பெண்கள் துன்புறுத்தல் சட்டத்தில் வழக்குப்பதிந்து, வாலிபரை தேடி வருகின்றனர்.
