/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் 10 அடிக்கு மேல் விநாயகர் சிலை வைக்க தடை
/
ஓசூரில் 10 அடிக்கு மேல் விநாயகர் சிலை வைக்க தடை
ADDED : ஆக 03, 2024 06:59 AM
ஓசூர்: ஓசூரில், விநாயகர் சதுர்த்தியின் போது, 10 அடிக்கு மேல் சிலைகளை வைக்க கூடாது என, ஆலோசனை கூட்டத்தில் போலீசார் அறிவுறுத்தினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின் போது, ஆயிரக்கணக்கான சிலைகளை பக்தர்கள் மற்றும் ஹிந்து அமைப்பினர் பிரதிஷ்டை செய்து, ஒரு வாரம் வரை பூஜை செய்து நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி வரும் செப்., 7 ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஓசூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில், ஹிந்து அமைப்புகளை அழைத்து போலீசார் ஆலோசனை செய்தனர். டி.எஸ்.பி., பாபுபிரசாந்த் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், முத்தமிழ் செல்வன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகளை ஆர்டர் செய்து வைக்க கூடாது. கடந்தாண்டு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இந்த ஆண்டும் சிலைகளை வைக்க அனுமதி வழங்கப்படும். பொதுமக்கள் கூடும் அரசுக்கு சொந்தமான இடங்களில் சிலைகளை வைக்க கூடாது. தனியார் இடங்களில் அதன் உரிமையாளரின் அனுமதி பெற்று தான் சிலை வைக்க வேண்டும்.பொதுமக்களுக்கு இடையூறாக செட் அமைக்கக்கூடாது. விநாயகர் சிலை வைக்கும் இடங்களில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா மற்றும் பகல், இரவு நேரங்களில் பாதுகாப்புக்கு, 5 தன்னார்வலர்கள் தங்க வேண்டும். தகர செட் தான் போட வேண்டும். விநாயகர் சிலைகளை போலீசார் கூறும் நேரத்தில் கரைக்க வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் வைக்கக்கூடாது. மற்ற மதத்தினர் புண்படும்படியான பாடல்களை இசைக்க கூடாது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்ல வேண்டும். சிலை வைப்பதாக கூறி, யாரிடமும் அடாவடி வசூல் செய்யக்கூடாது. அரசால் கூறப்படும் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.