ADDED : அக் 29, 2024 12:58 AM
வட்டார கலைத்திருவிழா போட்டிகள்
கிருஷ்ணகிரி, அக். 29-
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு பள்ளிகளில், கலைத்திருவிழா நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆக., 28ல் குறுவள அளவிலான கலைத்திருவிழா நடந்தது. இதில், ஒற்றையர் நடனம், குழு நடனம், பாட்டு பாடுவது, நாடகம், தெருக்கூத்து, பானை ஓவியம், செதுக்கு சிற்பம், பல்வேறு வாத்தியங்கள் வாசிப்பது உள்ளிட்ட, 50 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு நேற்று, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடந்தன.
தலைமை ஆசிரியர் மகேந்திரன் வரவேற்றார். சி.இ.ஓ., (பொ) முனிராஜ் தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் வடிவேல், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர் செல்வராஜ், மேற்பார்வையாளர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் பயிற்றுனர்கள் ராஜேந்திரன், ராஜா, தமிழ்தென்றல், அம்பிகா, திவ்யா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேற்பார்வையாளர் அசோக் நன்றி கூறினார்.
இதில், 6ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர், 750க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் தேர்வாகும் மாணவ, மாணவியர் மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.