ADDED : மார் 30, 2024 03:20 AM
டிராபிக் வார்டன்களுக்கு
ஓசூரில் பாராட்டு விழா
ஓசூர்: ஓசூரில், சி.எம்.சி.ஏ., சார்பில் (குடிமை விழிப்புணர்வுக்கான குழந்தைகள் இயக்கம்) என் ஊர், என் பெருமை என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, எம்.ஜி.ஆர்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், போக்குவரத்து போலீசாருக்கு உதவியாக இருக்கும், தன்னார்வலர்களான டிராபிக் வார்டன்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தலைமை டிராபிக் வார்டன் முத்துசாமி, சாலை பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவியருக்கு விளக்கி கூறினார். மேலும், விபத்துகளை தவிர்க்க மாணவர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும். ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என வலியுறுத்தினார்.
கல்லுாரி முதல்வர் முத்துமணி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் லெனின், சாதியா பேகம், பாலசுந்தரம், சி.எம்.சி.ஏ., ஓசூர் திட்ட மேலாளர் டேவிட் பாக்கியசுந்தரம், திட்ட அலுவலர் மாதப்பன், திட்ட ஒருங்கிணைப்பாளர் பவானி உட்பட பலர் பங்கேற்றனர். இறுதியில், டிராபிக் வார்டன்களுக்கு மாணவ, மாணவியர் வாழ்த்து அட்டைகளை வழங்கி நன்றி தெரிவித்தனர்.
பணம், மொபைல்போன்
திருடிய ஐந்து பேர் கைது
ஓசூர்: உத்தனப்பள்ளி அருகே, பணம் மற்றும் மொபைல்போன்கள் திருடிய, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார், 34. தனியார் கட்டுமான நிறுவனத்தின் மேலாளரான இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த லாலிக்கல் பகுதியில் தங்கி, தனியார் நிறுவன குடியிருப்பு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். கடந்த, 27 இரவு, 10:00 மணிக்கு, தனது அறையின் ஜன்னலில், இரு மொபைல்போன், 2,000 ரூபாய் ஆகியவற்றை வைத்திருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், மொபைல்போன்கள் மற்றும் பணத்தை திருடி சென்றனர்.
ராஜ்குமார் கொடுத்த புகார்படி, உத்தனப்பள்ளி போலீசார் விசாரித்தனர். இதில், உத்தனப்பள்ளி அடுத்த சிகரலப்பள்ளியை சேர்ந்த யுவராஜ், 19, சிக்ககவுண்டனுாரை சேர்ந்த சத்யராஜ், 23, கோட்டட்டியை சேர்ந்த அபினந்தகுமார், 20, தேன்கனிக்கோட்டை அடுத்த குருபரப்பள்ளியை சேர்ந்த சங்கரன், 27, ராஜேஷ், 26, ஆகிய, 5 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார்,
பணம் மற்றும் மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.
ஊருக்குள் புகுந்து பெண்கள் மீது
தாக்குதல்; நான்கு பேர் கைது
ஓசூர்: கெலமங்கலம் அருகே, ஊருக்குள் புகுந்து பெண்களை தாக்கி, வீட்டை சேதப்படுத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த தொட்டேகானப்பள்ளி காந்தி நகரை சேர்ந்த சண்முகம், 20, டி.கொத்தப்பள்ளியை சேர்ந்த அரவிந்த், 22, ஆகியோர் நேற்று முன்தினம் மாலை, கெலமங்கலம் இந்தியன் வங்கியில் பணம் செலுத்த வரிசையில் நின்றிருந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சண்முகம், அரவிந்தை கையால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அரவிந்த், தனது கிராமத்திற்கு சென்று நடந்ததை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, 70 பேர் கொண்ட கும்பல், தொட்டேகானப்பள்ளி கிராமம் சென்று, சண்முகத்தின் உறவினர்களான ஆறுமுகம் மனைவி சிவகாமி, 42, இவரது மகன் செல்வம், 20, மற்றும் மாதம்மாள், 48, 17 வயது சிறுமி ஆகிய நான்கு பேரை கல்லால் தாக்கினர். மேலும், வீட்டின் கூரை ஓடுகளை
சேதப்படுத்தி, ஜாதி பெயரை கூறி இழிவுப்
படுத்தினர்.
இது தொடர்பாக, சிவகாமி கொடுத்த புகார்படி, பெண் வன்கொடுமை மற்றும் எஸ்.சி.,
எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த கெலமங்கலம் போலீசார், டி.கொத்தப்பள்ளியை சேர்ந்த ஜெகதீஸ், 31, புருசோத்தமன், 19, பரத், 19, சதிஷ், 19, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.

