ADDED : அக் 23, 2026 05:38 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில், பிரதம மந்திரி சூரிய சக்தி திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாமை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். த.வெ.க., - எம்.எல்.ஏ., முகுந்தன் முன்னிலை வகித்தார்.
இம்முகாமில், விண்ணப்பங்களை வழங்கி, கலெக்டர் தினேஷ்குமார் பேசியதாவது: சூரியசக்தி மின் உற்பத்தியில் ஒவ்வொரு வீடும், உற்பத்தியாளராக மாற வேண்டும். ஒவ்வொரு வீடும், வெறும் மின் நுகர்வோராக மட்டுமல்லாமல், சூரியசக்தி மூலம் மின் உற்பத்தியாளராக மாறுவதே, 'பிரதம மந்திரி சூரிய சக்தி' திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தில், ஒரு லட்சம் ரூபாய் வரை கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது. வீடுகளின் மேற்கூரையில், 3 கிலோவாட் திறன் கொண்ட சூரியசக்தி மின்கட்டமைப்பு அமைக்க தோராயமாக, 2.20 லட்சம் ரூபாய் முதல், 2.50 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இதில் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து சிறப்பு மானியங்கள் வழங்கப்படுகிறது. எனவே, அனைவரும் இச்சூரியசக்தி மானிய திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
கிருஷ்ணகிரி மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் கண்ணன், செயற்பொறியாளர்கள் ஜெகநாதன், பவுன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
