/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கால்வாய்கள் துார்வாரப்படாத அவலம் நீர்வரத்தின்றி குட்டையான தும்பலஹள்ளி அணை
/
கால்வாய்கள் துார்வாரப்படாத அவலம் நீர்வரத்தின்றி குட்டையான தும்பலஹள்ளி அணை
கால்வாய்கள் துார்வாரப்படாத அவலம் நீர்வரத்தின்றி குட்டையான தும்பலஹள்ளி அணை
கால்வாய்கள் துார்வாரப்படாத அவலம் நீர்வரத்தின்றி குட்டையான தும்பலஹள்ளி அணை
ADDED : டிச 19, 2024 12:56 AM
காரிமங்கலம், டிச. 19-
காரிமங்கலம் அருகே, போதியளவு பருவமழை பெய்தும், கால்வாய் துார்வாராமல் நீர்வரத்தின்றி குட்டையாக மாறிய தும்பலஹள்ளி அணைக்கு, சின்னார் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள தும்பலஹள்ளி அணை, 45 அடி உயரம், 131 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. இதில், வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் மூலம், 2,617 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பஞ்சப்பள்ளி, சின்னார், ஜெர்தலாவ், செங்கன் பசுவன்தலாவ், அண்ணாமலைஹள்ளி உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் நீர் மற்றும் சின்னார் அணையின் உபரிநீர், தும்பலஹள்ளி அணைக்கு நீர் ஆதாரமாக உள்ளது.
சின்னார் அணையிலிருந்து வரும் நீரால், 7 ஏரிகள் நிரம்பிய பின், தும்பலஹள்ளி அணைக்கு தண்ணீர்
செல்கிறது.
சின்னாற்றிலிருந்து, செங்கன் பசுவன்தலாவ் ஏரிக்கு செல்லும் ஜெர்தலாவ் கால்வாய், 420 கன அடியாக உள்ளதை, 1,000 கன அடி கொள்ளளவு கொண்டதாக மாற்றினால், மழைக்
காலத்தில் வீணாக ஒகேனக்கல் காவிரியாற்றுக்கு செல்லும் உபரி நீரை, முழுமையாக ஏரிகளில் நிரப்ப முடியும். மேலும், சின்னாற்றில், சாமனுார் மற்றும் தொல்லேகாது ஆகிய, 2 இடங்களில் தடுப்பணை கட்டினால், கூடுதல் நீரை சேமித்து, ஏரிகளில் நிரப்ப முடியும்.
கால்வாய்கள் துார்வாராமல் பராமரிப்பின்றி உள்ளதால், பஞ்சப்பள்ளியிலுள்ள சின்னார் அணை நிரம்பியும் ஏரிகள் மற்றும் தும்பலஹள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. கடந்த, 7 ம் தேதியன்று சின்னார் அணை நிரம்பி வினாடிக்கு, 140 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று, 12வது நாளாக, 90 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இருப்பினும், அதை நீராதாரமாக கொண்ட தும்பலஹள்ளி அணை, நீரின்றி குட்டையாகவே உள்ளது. எனவே, கால்வாயை துார்வாரி, பாசனத்திற்கு மற்றும் குடிநீர் தேவைக்கு சின்னார் அணையிலிருந்து, கூடுதலாக தண்ணீர் திறந்து, தும்பலஹள்ளி அணைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த, 2022 ல் சின்னார் அணையிலிருந்து, 100 நாட்களுக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப் பட்டது. அப்போது, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன், விவசாயிகளே ஜெர்தலாவ் ஏரி கால்வாயை சீரமைத்து, பாலக்கோடு அருகே உள்ள எர்ரனஹள்ளி ஏரியில் நீரை நிரப்பி அங்கிருந்து, மற்ற ஏரிகளுக்கு நீரை கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

