/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கழிவுநீரை வெளியேற்ற போர்வெல் அமைக்க முயன்ற தொழிற்சாலை தடுத்து நிறுத்தி கவுன்சிலர், பொதுமக்கள் வாக்குவாதம்

ADDED : நவ 17, 2024 02:20 AM
ஓசூர், நவ. 17-
ஓசூரில், கழிவுநீரை வெளியேற்ற போர்வெல் அமைக்க முயன்ற தனியார் தொழிற்சாலை நிர்வாகத்திடம், அ.தி.மு.க., கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, ஓசூர் சிப்காட், 1ல் இயங்கும், தனியார் தொழிற்சாலைகள், அதன் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்ற, மிகப்பெரிய போர்வெல் அமைத்து அதற்குள் கழிவு நீரை விடுவதால், மூக்கண்டப்பள்ளி சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதித்து, தண்ணீர் நிறம் மாறி வருகிறது. அதை பயன்படுத்தும் மக்களுக்கு, அரிப்பு, உடல்நிலை பாதிப்பு போன்ற பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன. ஏற்கனவே தண்ணீர் நிறம் மாறிய போர்வெல்களில் இருந்து, மாதிரிகளை எடுத்த, மாநகராட்சி நிர்வாகம், ஆய்வுக்கு அனுப்பியது. ஓராண்டான நிலையில், அதன் முடிவுகள் என்னவானது என்பது கூட தெரியவில்லை. இந்நிலையில், ஓசூர் சிப்காட் பகுதியில் இயங்கும், ஒரு தனியார் தொழிற்சாலை, நேற்று முன்தினம் இரவில் தொழிற்சாலை வளாகத்திற்குள் சுத்திகரிக்கப்படாத ரசாயன கழிவு நீரை வெளியேற்றுவதற்காக போர்வெல் அமைக்க, ரிக் வாகனங்களை வரவழைத்திருப்பதாக, மூக்கண்டப்பள்ளி பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை தொழிற்சாலைக்கு சென்ற, மாநகராட்சி, 20வது வார்டு, அ.தி.மு.க., கவுன்சிலர் சிவராம் மற்றும் அப்பகுதி மக்கள், போர்வெல் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தொழிற்சாலை நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த், தொழிற்சாலையில் ஆய்வு செய்து, 'போர்வெல் அமைக்கக்கூடாது. மீறி அமைத்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்து சென்றார். இதையடுத்து மக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.